• Sun. Oct 6th, 2024

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு- நாளை விசாரணை

ByA.Tamilselvan

Jun 21, 2022

அதிமுகவில் ஒற்றைத்தலைமையை தேர்வு செய்ய பொதுக்குழுவை நாளை மறுநாள் ஜூன்.23 கூட்ட முடிவுசெய்துள்ள நிலையில் ஐகோர்ட்டில் விசாரணையை தள்ளி வைத்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .மேலும் பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா என சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .
அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் சட்ட விதிகளுக்கு எதிரானது எனக்கூறி அக்கட்சி உறுப்பினர்களான திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன், முன்னாள் எம்,பி, கே.சி.பழனிச்சாமியின் மகன் சுரேன் பழனிச்சாமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், பொதுச்செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த அதிமுக உள்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் புதிய நியமனங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தடை விதிக்க கோரி கூடுதல் மனுவை ஒன்றாக இவர்கள் இருவரும் தாக்கல் செய்துள்ளனர்.
பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டுதல், கட்சி ஆட்சிமன்ற குழு அமைத்தல், உட்கட்சி தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிடுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும். கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வரவும், செயற்குழுவால் ஏற்கனவே நியமிக்கப்பட்ட தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் பதவியில் நீடிக்கவும் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி, இந்த வழக்கில் கூடுதல் மனுக்களை நாளை (புதன் கிழமை) விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *