ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் வீட்டிற்கு முன்பாக வந்த வெற்றிமாறன் என்ற நபர், திடீரென மண்ணெண்ணெய்யை ஊற்றி பற்ற வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், உடனடியாக விரைந்து செயல்பட்டு தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து அவரை மீட்டனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை காவல்துறை வெளியிட்டுள்ளது. 40 சதவிகிதம் தீக்காயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வெற்றிமாறன் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைப்பட்டு வருகிறது. இதை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று விசாரித்தார்.
இந்த நிலையில் காவல்துறையினர் விசாரணையில், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட வெற்றிமாறன் என்பவர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவர் வைத்திருந்த மனுவில், உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் தன்னை, தேர்தலில் இருந்து விலகுமாறு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பெயரை கூறி சிலர் மிரட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது என காவல்துறையினர் கூறுகின்றனர்.