தமிழ்நாட்டில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது தொடங்கும் என கேள்வி எழுந்தது.
பள்ளிக்கல்வித் துறை சார்பாக மாவட்டம் வாரியாக முதன்மை கல்வி அலுவலர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவில் ஒரு அறிக்கை தயார் செய்யப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 15ஆம் தேதியே அறிக்கை கொடுக்கப்பட்டுவிட்டாலும் முதலமைச்சர் இது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்த இரு வாரங்களில் கொரோனா பாதிப்பு சில நாள்களில் லேசாக ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது. தடுப்பூசி செலுத்தப்படுவது அதிகரித்துள்ள நிலையில் பள்ளிகளைத் திறக்கலாம் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், ஐசிஎம்ஆரின் செரோ சர்வே அறிக்கையை மேற்கோள் காட்டி தமிழகத்தில் தொடக்க பள்ளிகளில் நேரடி வகுப்புகளை எடுப்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என்று கூறியுள்ளார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளிகள் திறக்கபடுவது தொடர்பாக இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது ஊரடங்கு தளர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.