அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்த நிலையில் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் ஆதரவாளர்கள் புடைசூழ ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசும் போது..
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. கட்சியை அடாவடியாக சட்டத்திற்கு புறம்பாக அபகரிக்க முடியாது. தர்மத்தை நம்பினேன் மாட்சிமைமிக்க நீதிமன்றங்களை நம்பினேன்.அ.தி.மு.க.வை தனிநபர்கள் ஆக்கிரமிக்க நினைத்தால் அது எப்போதும் நடக்காது. ஒன்றரை கோடி தொண்டர்கள் என்ன நினைத்தார்களோ அது இன்று நடந்துள்ளது. அ.தி.மு.க.வுக்கு முழுமையான வெற்றி கிடைத்துள்ளது.அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதே எங்களது விருப்பம் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளித்து நாங்கள் நடப்போம். தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு விமர்சனங்களை தாங்கி கொள்ளும் பக்குவம் இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா செய்த தியாகங்களை மனதில் வைத்து செயல்படுவோம் இரு தரப்பு என்பது கிடையாது, அ.தி.மு.க. ஒரே தரப்பு தான். இவ்வாறு அவர் கூறினார்.