• Thu. Jun 1st, 2023

நவம்பர் கடைசியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்…

Byமதி

Nov 6, 2021

நவம்பர் கடைசியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் வரும் 2022 – 2023ம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தொடங்கியது. வரும் 15ம் தேதிக்குள் தொழில்துறையினர் தங்களது ஆலோசனைகளை வழங்க நிதியமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா தொற்றுநோயைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த ஆண்டு நடத்தப்படவில்லை. இந்நிலையில் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் நான்காவது வாரத்தில் தொடங்கும் எனத் தெரிகிறது. இதுகுறித்து நாடாளுமன்ற வட்டாரங்கள் கூறுகையில், ‘நாடாளுமன்ற ஒரு மாத குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் நான்காவது வாரத்தில் தொடங்கும். அதிகாரப்பூர்வ முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றாலும், அமர்வு வரும் 29ம் தேதி தொடங்கி டிச. 23ம் தேதியுடன் முடிவடையும். சுமார் 20 அமர்வுகளைக் கொண்ட கூட்டத்தொடர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக முடிவடையும்.

மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் ஒரே நேரத்தில் அமர்வுகள் இருந்தாலும் உறுப்பினர்கள் சமூக விலகல் விதிமுறைகளைப் பின்பற்றி அமருவார்கள்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரபிரதேசம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளதால், முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

பட்ஜெட்டில் நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளதால் அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி ஒன்றிய அரசின் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

மோடி அரசின் இரண்டாவது பதவிக்காலத்தின் நான்காவது பட்ஜெட் இதுவாகும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நான்காவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *