• Thu. Apr 25th, 2024

அண்ணா அறிவாலயத்தில் ஓராண்டு சாதனை விழா- கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு

ByA.Tamilselvan

May 7, 2022

திமுக அரசின் ஒராண்டு சாதனைவிழா அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடக்கவுள்ளது. இவ்விழாவில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சிக்கு வந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. தி.மு.க. ஆட்சி 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் நேரில் சென்று பார்த்து வாழ்த்து பெற்றனர்.
இன்று காலையில் சட்டசபைக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.சட்டசபைக்குள் அவர் நுழைந்த போது அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து நின்று மேஜையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இன்று மாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் செல்கிறார். அங்கு அமைந்துள்ள அண்ணா, கருணாநிதி சிலைகளுக்கும், உருவப்படங்களுக்கும் மரியாதை செலுத்துகிறார்.அதன் பிறகு கலைஞர் அரங்கில் ஓராண்டு சாதனையை வெளிப்படுத்தும் விழா நடைபெறுகிறது.அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைக்கழக நிர்வாகிகள், கட்சியின் மூத்த முன்னோடிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மாவட்டக்கழக செயலாளர்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நேரில் சென்று பார்த்து சால்வை வழங்கி வாழ்த்துகிறார்கள்.அது மட்டுமின்றி கூட்டணி கட்சிகளை சார்ந்த தலைவர்களும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
அதன் பிறகு அங்கு நடைபெறும் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.தி.மு.க. ஆட்சியின் ஒரு ஆண்டு சாதனையில் என்னென்ன தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. என்னென்ன திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. மக்களுக்கு இன்னும் என்னென்ன செய்ய உள்ளோம் என்பதை அவர் விரிவாக விளக்கி பேச உள்ளார்.ஒரு ஆண்டு சாதனையை ஒவ்வொரு பகுதியிலும் கட்சி நிர்வாகிகள் மக்களுக்கு விளக்கி சொல்ல வேண்டும் என்பதற்காக பொதுக்கூட்டங்கள் நடத்தவும் ஏற்பாடு செய்யும் படி மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நிகழ்ச்சி தொடங்குவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *