• Sat. Apr 27th, 2024

கல்வி, விவசாயம், தொழில் துறையில் திமுக சாதித்தது என்ன? – சிறப்பு தொகுப்பு

2021 சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் திருப்புமுனை திருச்சி மாநாட்டில் பேசிய மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பல்வேறு விஷயங்களை பேசினார்.

ஓராண்டுகள் முழுமையான ஆட்சியை திமுக நிறைவு செய்துள்ளது. இந்த ஓராண்டில், கல்வி, விவசாயம், தொழில், மனிதவளம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் திமுக சாதித்தது என்ன? சவாலாக இருப்பது என்ன என்பதை பார்க்கலாம்.

கல்வி துறையில் திமுக சாதனை:

திமுக அரியணை ஏறியதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று நீட் விலக்கு போராட்டம். திமுக ஆட்சிக்கு வந்த உடன் நிச்சயம் நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற்று தருவோம் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர் போராட்டங்களையும், பிரச்சாரத்தையும் நடத்தினார். ஆட்சிக்கு வந்த பிறகும், நீட் விலக்கிற்காக தமிழ்நாடு அரசு நடத்தும் தொடர் போராட்டம் தனித்த பார்வையை திமுக மீது அளிக்கிறது. நீட் தேர்வால் தமிழ்நாடு மாணவர்களின் பாதிப்பை ஆராய்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கையை சமர்ப்பித்தது. அதன்படி, முதல் முறை நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அளித்த பிறகும், அதில் எந்த திருத்தத்தையும் செய்யாமல் மீண்டும் ஆளுநருக்கே அதை அனுப்பி, இன்று நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவர் மாளிகையில் உள்ளது. நீட்டிற்காக திமுக மேற்கொள்ளும் சட்ட போராட்டமும், அரசியல் அழுத்தமும் மாணவர்கள் மீதான ஸ்டாலினின் நம்பிக்கையை அதிகரிக்கிறது.

துணை வேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என். ரவி கூட்டியதும், துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநரின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியுள்ளது. சென்னை பல்கலைக்கழக சட்டம் மற்றும் தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் மாநில அரசு செய்துள்ள திருத்தம் ஆளுநருக்கும் – முதலமைச்சருக்கும் இடையே மோதல் போக்கை அதிகரித்துள்ளது. நீட் தொடங்கி, துணை வேந்தர் நியமனம் வரை ஆளுநரிடம் தொடர்ந்து மோதல் போக்கை திமுக கடைபிடித்து வருகிறது. இதனால், தேர்தல் வாக்குறுதியின்படி, மாநிலக் கல்விக் கொள்கை வரைவுக் குழுவை முதலமைச்சர் ஸ்டாலின் அமைத்தார்.

மாநிலக் கல்விக் கொள்கை வரைவுக் குழு தொடர்ந்து ஆய்விலேயே இருக்கிறது. இதற்கிடையில், மத்திய அரசும் பல்கலைக்கழக மானிய குழுவும் தேசிய கல்விக் கொள்கையில் முக்கிய அம்சங்களான 4 ஆண்டு பட்டப்படிப்பு, பி.இ. மற்றும் பிடெக் படிப்புகளில் பல கட்ட நுழைவுத் தேர்வுகள், மத்திய பல்கலைக்கழகங்களுக்கு பொது நுழைவுத் தேர்வு போன்றவற்றை நடைமுறைப்படுத்த உள்ளது.
மாநில கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்துவதற்குள் தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு முழுமையாக அமல்படுத்தினால் அதனை ஸ்டாலின் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பது தமிழ்நாடு கல்வித்துறையில் எதிர்பார்க்கப்படுகிறது. நீட், தேசிய கல்விக் கொள்கை, பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு என கல்வியின் அடிப்படை கட்டமைப்பு உடைபடாமல் இருக்க வலுவாக போராட வேண்டிய நிலைக்கு தமிழ்நாடு கல்வித்துறை உள்ளது.

இருப்பினும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்முறை பட்டப் படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு மற்றும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நிதியுதவி அளிப்பது போன்ற முயற்சிகள் தமிழ்நாடு அரசின் கல்வி மேம்பாட்டுக்கான சமிக்ஞையாக உள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட பொருளாதார முடக்கத்தால் பல குடும்பங்கள் தங்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்தார்கள். இதனால், அரசு பள்ளியின் தரத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் தமிழ்நாடு பள்ளி கல்விக்கு ஏற்பட்டுள்ளது.

விவசாயத்துறையில் திமுக சாதித்தது?:

விவசாயத் துறைக்கான அரசின் வரைபடத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 2021ல் திருச்சியில் வெளியிட்டார். அதன்படி, தற்போதுள்ள நிகர அறுவடைப் பகுதியை 60%லிருந்து 75% ஆக அதிகரிப்பது; இரட்டைப் பயிர் பரப்பு 10 லட்சம் ஹெக்டேரில் இருந்து 20 லட்சம் ஹெக்டேராக அதிகரிப்பு; உணவு தானிய உற்பத்தியில் தமிழகத்தை முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாக மாற்ற வேண்டும் என சூளுரைத்தார். அதன்படி, ஆட்சி பொறுப்பை ஏற்ற உடனேயே, ‘கலைஞரின் அனைத்து கிராமங்களையும் ஒருங்கிணைந்த விவசாய வளர்ச்சி’ என்ற திட்டத்தில், நீர் ஆதாரங்கள், நுண்ணீர் பாசன அமைப்புகள் மற்றும் பிற உதவிகளை உருவாக்குவதன் மூலம் தரிசு நிலத்தை விவசாயத்திற்கு ஏற்றதாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்தியது. சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும் கடந்த ஆண்டு 1,997 கிராம பஞ்சாயத்துகளில் தொடங்கி பல்வேறு துறைகளின் அனைத்து விவசாயி சார்ந்த திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொண்டது.

இவை எல்லாவற்றையும் விட, வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட்டை தாக்கல் செய்து வரலாற்றில் புதிய அத்தியாயத்தை திமுக எழுதியுள்ளது. ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே கடும் மழையால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இருப்பினும் கூட, இந்த ஓராண்டுகளில் விவசாய துறை பாதிப்பை சந்திக்கவில்லை.

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு 9% உணவு உற்பத்தி அதிகரித்து 118 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
2021-22ல் திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தியதால் மொத்த சாகுபடி பரப்பு 6.3 லட்சம் ஏக்கரில் இருந்து 116. 6 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது. கடந்த 46 ஆண்டுகளில் வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கும்போது, குறுவை பருவத்தில் (குறுகிய கால நெல்) கடந்த ஆண்டு 3.2 லட்சம் ஏக்கரில் கூடுதலாக 1.7 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது. இத்துறையில் தொடங்கப்பட்ட பணி முறைகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளன.

சுமார் 7.5 லட்சம் ஏக்கர் உலர் நிலங்கள் உருவாக்கப்பட்டு, நிலையான பசுமை அட்டைத் திட்டத்தின் கீழ் 73 லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டன. இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, 1. 15 லட்சம் ஏக்கர் நிலம் இயற்கை சான்றிதழின் கீழ் கொண்டு வரப்பட்டது, மேலும் பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாத்தல். கிணற்றுப் பாசனப் பகுதிகளில் கிளஸ்டர் அடிப்படையில் நுண்ணீர்ப் பாசனத்தை ஊக்குவிப்பது மையப் புள்ளியாக மாறியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் பயிர் பல்வகைப்படுத்தல் ஊக்குவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு:

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது ஸ்டாலினின் சாதனை மையில் கல். மாநிலங்களின் சுயாட்சி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கூட்டாட்சி கொள்கைகள் சமரசம் செய்யப்படுவதாகவும் கடுமையாக விமர்சித்த ஸ்டாலின், 1987ல் கருணாநிதி ஆட்சியில் இயற்றப்பட்ட தமிழ்நாடு வேளாண்மைப் பொருள் விற்பனை ஒழுங்குமுறை சட்டத்தை உறுதி செய்து உத்தரவிட்டார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்தியாவின் எந்த மாநிலங்களும் சட்டமன்ற தீர்மானம் இயற்றாத போது ஸ்டாலினின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை தனித்துவமானதாக பார்க்கப்பட்டது. இதனையடுத்து, விவசாயிகளின் ஓராண்டு போராட்டத்திற்கு பிறகு 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொழில் துறையில் ஸ்டாலினின் ஓராண்டு:

2021-22 முதல் ஆண்டில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 70,000 கோடி புதிய தொழில் துறை முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதே போல, மின்சார வாகன உற்பத்தி மையமாக தமிழ்நாட்டை உருவாக்கும் முயற்சியில் மு.க.ஸ்டாலின் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனா இரண்டாவது அலையின் போது தான் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுபேற்றுக்கொண்டார். இதிலிருந்து, தொழில் துறையை மீட்பதற்காக, ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள தொழில்களில் வேலை பாதிக்கப்படாமல் இருக்க கவனம் செலுத்தப்பட்டது. படிப்படியாக முழு ஊரடங்கு நீக்கப்பட்ட பிறகு, 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாராமாக மாற்றவும், ஏற்றுமதி 300 பில்லியன் டாலரைத் தொடரவும் மு.க.ஸ்டாலின் உறுதி மொழி எடுத்துக்கொண்டார். இதனால், 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும் எனக் கூறினார். இதைத் தொடர்ந்து தமிழகத்தின் பொருளாதாரத்தை 10 ஆண்டுகளில் 280 பில்லியன் டாலர்களிலிருந்து நான்கு மடங்காக உயர்த்த புதிய கொள்கைகள் மற்றும் தொழில்கள் யுக்திகளையும் ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது.

வெளிநாடுகளின் முதலீட்டை ஈர்க்க தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஐக்கிய அமீரகத்திற்கு நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டார். ஐக்கிய அரபு அமீரக பயணம் விமர்சனத்தை உண்டாக்கினாலும் என்ன பலன் தரப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது. மொத்தத்தில், கல்வி, விவசாயம், தொழில் துறையில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *