

பெரியம்மாபாளையம் கிராமத்தில் மியாவாக்கி எனப்படும் குறுங்காடுகளை உருவாக்கிடும் வகையில் 8.5 ஏக்கர் பரப்பளவில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட பெரியம்மாபளையம் கிராமத்தில் மியாவாக்கி எனப்படும் குறுங்காடுகளை உருவாக்கிடும் வகையில் 8.5 ஏக்கர் பரப்பளவில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று (28.02.2025) தொடங்கி வைத்தார்.
மியாவாக்கி மரம் வளர்ப்பு முறை என்பது ஜப்பானில் வாழ்ந்த, யோகோஹாமா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய தாவரவியலாளரான அகிரா மியாவாக்கி என்பவர் கண்டுபிடித்த முறையாகும். அதனால், இந்தமுறை மரம் வளர்ப்புக்கு ‘மியாவாக்கி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இடைவெளி இல்லா அடர்காடு என்ற தத்துவப்படி, ஆழமான குழி தோண்டி அதில் மக்கும் குப்பைகளைக் கொட்டி நெருக்கமான முறையில் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நடும் முறைக்கு ‘மியாவாக்கி’ என்று பெயர்.

மியாவாக்கி முறையில் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையிலான மரங்கள் நடப்படும். 1,000 சதுரஅடி நிலத்தில் 400 மரங்கள் என்ற அடிப்படையில் மரக்கன்றுகள் நடப்படும். மியாவாக்கி முறையால் பூமியில் வெப்பம் குறையும், காற்றில் ஈரப்பதம் தக்க வைக்கப்படும், பறவைகளுக்கு வாழிடம் உருவாகும், பல்லுயிர்ச் சூழல் மேம்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகு சிறப்பு வாய்ந்த “மியாவாக்கி“ முறையில் பெரம்பலூர் மாவட்டம். வேப்பந்தட்டை ஒன்றியம் பெரியம்மாபாளையம் ஊராட்சியில் சுமார் 8.5 ஏக்கரில் சுமார் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், வேம்பு, புளி, மகிழம், நீர் மருது, நாவல், இலுப்பை, மகாகனி, செம்மரம், தேக்கு, கொய்யா, புங்கன் உள்ளிட்ட பல்வேறு வகையான 1லட்சம் மரக்கன்றுகளை வனத்துறை வழங்கியுள்ளது. மியாவாக்கி அடர்வன பகுதி உருவாக்குவதற்காக தொழிலதிபர் டத்தோ.பிரகதீஸ்குமார் அவர்கள் 2 ஆழ்துளை கிணறுகள், பைப்லைன், மரக்கன்றுகளுக்கு சொட்டுநீர் பாசன வசதி மற்றும் மரக்கன்றுகள் நடவு செய்யப்படும் 8.5 ஏக்கர் நிலப்பரப்பினை முழுவதும் சீர்திருத்தம் செய்து, மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். மற்றும் மியாவாக்கி அடர்வனத்தை உருவாக்கும் பணியை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) வைத்தியநாதன் முன்னெடுத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவ மாணவிகள் பலரும் மரக்கன்றுகளை நட்டுவைத்தனர். இப்பணியினை வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வனத்துறையின் முழு ஒத்துழைப்போடு இந்த மியாவாக்கி அடர்வனக் காடுகள் உருவாக்கும் பணி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், சார் ஆட்சியர் சு.கோகுல் மாவட்ட வனத்துறை அலுவலர் குகனேஷ், வனச்சரக அலுவலர்கள் பழனிக்குமார், முருகானந்தம், சோமசுந்தரம், சுதாகர், உதவி ஆணையர் கலால் (பொ) சிவா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செல்வம், வனவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், ஈடன் கார்டன்ஸ் பள்ளி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

