

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் மாருதி நகரை சேர்ந்தவர் வடிவேல் மகன் முத்துக்குமார் (வயது 44). ஸ்டீல் பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான காரில் மனைவி சாரதா (39) மகன் அமர்நாத் (18) ஆகியோருடன் சொந்த வேலையாக பெரம்பலூர் சென்று விட்டு, பின்னர் மீண்டும் கிருஷ்ணாபுரம் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை முத்துக்குமார் ஓட்டி சென்றார்.

கார் வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலையம் அருகே சென்றபோது திடீரென காரில் புகை வந்துள்ளது. இதனால் அதிர்சியடைந்த முத்துக்குமார் காரை நிறுத்தி விட்டு பார்த்தபோது இஞ்சின் பகுதியில் இருந்து அதிக அளவில் புகை வருவதை கண்டு மனைவி மற்றும் மகனை உடனே கீழே இறக்கினார். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து மள மளவென எரிந்தது. இது தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை தண்ணீரால் அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து எலும்பு கூடு போன்று சேதம் அடைந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

