“அதிமுகவில் உள்ளவர்கள் ஒருவர் பின் ஒருவராக திமுகவில் வந்து இணைவார்கள்” என்று, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்பி நாகராஜன் கூறினார்.
கோவையைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர், அரசு வக்கீலாக பணியாற்றினார். 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, அதிமுக சார்பில் கோவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். சசிகலா ஆதரவாளராக செயல்பட்ட நாகராஜன், ஓபிஎஸ் – இபிஎஸ் இணைப்புக்கு பிறகும் அதே நிலைப்பாட்டில் தொடர்ந்தார்.
சில ஆண்டுகளாக அரசியல் செயல்பாடின்றி இருந்த அவர், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக மாவட்ட பொறுப்பாளர் கிருஷ்ணன் முன்னிலையில் நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை நாகராஜன், “கோவை மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக மாற்ற தமிழக முதல்வர் வாக்குறுதி கொடுத்துள்ளார், கோவை மாவட்டத்தை திமுகவின் கோட்டையாக மாற்றுவதற்கு பணியாற்றுவேன்.
எதிர்காலத் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கவும், தமிழ் வளரவும் முதலமைச்சருடன் இணைந்து பாடுபடுவேன்.
அதிமுகவில் உள்ளவர்கள் ஒருவர் பின் ஒருவராக திமுகவில் வந்து இணைவார்கள். தலைவர் கலைஞர் எப்படி தன்னுடைய ஆளுமைமிக்க அரசியலால் இந்தியாவின் பிரதமர்களை தன் கை விரல்களில் வைத்திருந்தாரோ அதே போல் வருங்காலங்களில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கை நீட்டி இவர்கள் தான் இந்தியாவின் பிரதமர், ஜனாதிபதி என்று கூறினால் அவர்கள்தான் இந்தியாவின் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் இருப்பார்கள்” எனக் கூறினார்.