• Fri. Mar 29th, 2024

மாரிதாசுக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டது ஏன்? – நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பின் முழு விவரம்

கடந்த புதன்கிழமை (08.12.21) குன்னூர் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிகழ்வை குறிப்பிட்டு, யூடியூபர் மாரிதாஸ், தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் “திமுக ஆட்சியில் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா?” என்று கேள்வி எழுப்பியதுடன் “பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.


இந்த பதிவுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பவே மாரிதாஸ் அந்த பதிவை நீக்கிவிட்டார். இந்நிலையில், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மதுரை மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகி வி.பாலகிருண்ணன் என்பர், சைபர் கிரைம் பிரிவில் அளித்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் 124A (தேசவிரோதம்), 153A (இரு பிரிவினருக்கு இடையே பகைமையை தூண்டுதல்), 504 (பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்), 505 (2), 505 1(b) (அரசுக்கு எதிராக மக்களை தூண்டிவிடுதல்) ஆகிய பிரிவின் கீழ் மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தன் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி மாரிதாஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று (14.12.21) அதை ரத்து செய்து உத்தரவிட்டது.


மாரிதாஸ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது செல்லாது என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தன் உத்தரவில் தெரிவித்துள்ளது. அதற்கான காரணத்தையும் அவர் தனித்தனியாக விளக்கியுள்ளார்.


நீதிபதி தனது உத்தரவில், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 504ன் படி, அமைதியை குலைக்கும் உள்நோக்கத்தோடு, ஒருவரை அவமதிக்கும் செயலலில் ஈடுபவதன் மூலம் அவரை தூண்டிவிடுதல் சட்டப்படி குற்றமாகும் என்பதை குறிப்பிட்டுள்ளார்.


இந்த பிரிவின்படி ஒருவர் மீது வழக்கு தொடர வேண்டும் எனில், அவமதிக்கப்படுபவர், தான் அவமதிக்கப்படுவதன் மூலம் அமைதியை குலைக்கும் செயலில் ஈடுபடும் வகையில், அவரை அவமதிப்பவரின் முன் நேரடியாக இருக்க வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் விளக்கியுள்ளார்.


ஆனால் இந்த வழக்கின்படி, மாரிதாஸ் தனது டிவிட்டரில் ஒரு பதிவை இட்டுள்ளார் என்றும் அதை எடுத்துக்கொள்வதும், எடுத்துக்கொள்ளாததும் அவரை பின் தொடர்பவர்களை பொறுத்தது என்ற வகையில், இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 504ன் கீழ் மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்தது செல்லாது என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.


தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்தில், அதற்கேற்ப சட்டங்களை புரிந்துகொள்ள வேண்டும் என்று புகார்தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரின் வாதத்தை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி, உரிமை சார்ந்த சட்டங்கள் என்று வரும்போது நீதிமன்றம் ஒரு படி மேலே சென்று சட்டங்களை புரிந்துகொள்ளலாம் என்று கூறியுள்ள நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், குற்றவியல் சட்டங்களை அவ்வாறு விளங்கிக்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.


இரண்டாவதாக, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 505(1)(b)ன் படி, குறிப்பிட்ட பிரிவினரை, பொது அமைதிக்கு குந்தகம் விளைவுக்கும் உள்நோக்கத்துடன் தூண்டிவிடும் வகையில் கருத்தை வெளியிடுவது, பரப்புவது குற்றமாகும் என்பதை நீதிபதி உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், மாரிதாஸ் டிவிட்டரில் வெளியிட்ட கருத்தை, தேசத்தின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு விடுக்கப்பட்ட அழைப்பாகவே புரிந்துகொள்ள முடிகிறது என்று கூறியுள்ள நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆகவே, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 505(1)(b)ன் கீழ் மாரிதாசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது செல்லாது என்று தெரிவித்துள்ளார்.


மூன்றாவதாக, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 505(2)ன் படி, மதம், இனம், பிறப்பிடம், மொழி, சாதி அல்லது வேறு எந்த வகையிலோ, இரு பிரிவினரிடையே பகையையும், மோதலை தூண்டும் வகையில் கருத்து கூறுவதும் பரப்புவதும் குற்றமாகும் என்றும், அதேபோல் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153Aன் படி, மதம், இனம், பிறப்பிடம், மொழி, சாதி அல்லது வேறு எந்த வகையிலோ, இரு பிரிவினரிடையே பகைமையை தூண்டுவதன் மூலம் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிப்பது குற்றமாகும் என்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.


ஆனால், மாரிதாஸ் டிவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்து எந்த இரண்டு பிரிவையும் குறிக்கவில்லை என்றும், மதம், இனம், பிறப்பிடம், மொழி, சாதி என எந்த பிரிவையும் குறிக்கவில்லை என்றும் கூறியுள் நீதிபதி, பிரிவினைவாத போக்கு முலையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும் என்பதே மாரிதாசின் நோக்கமா இருந்துள்ளதால், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 505(2) மற்றும் 153Aன் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்தது செல்லாது என்று தனது உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார்.
நான்காவதாக, இந்திய தண்டனை சட்டம் 124Aன் படி, ஒருவர் தன்னுடைய செயல், சொல் அல்லது செயல்பாடுகள் மூலம் சட்டப்படி அமைந்த அரசுக்கு எதிராக வெறுப்பையும், அவநம்பிக்கையையும் தூண்டுவது குற்றமாகும் என்பதை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.


ஆனால், மாரிதாஸ் பதிவிட்டுள்ள கருத்து அரசின் அடிப்படைக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்றும், அரசியல் சாசனத்தின் பிரிவு 51Aன் படி, இறையாண்மையையும், ஒற்றுமையையும் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று கூறியுள்ள நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகவே, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 124Aன் படி மாரிதாசுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது செல்லாது என்று தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
மேலும், மாநிலத்தில் ஒரு மோசமான போக்கு வளர்ந்து வருவதை மாரிதாஸ் அரசுக்கு சுட்டிக்காட்டியுள்ளதாகவும், அரசு செயல்படாமல் இருப்பதை உணர்ந்த மாரிதாஸ், தன்னுடைய கவலையை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.


பொது விவகாரங்களில் தொடர்ந்து கருத்துகூறி வரும் யூடியூப்பர்களுக்கும், பத்திரிகையாளர்களைப் போலவே அரசியல் சாசனத்தின் பிரிவு 19 (1)(a)ன் படி, கருத்து சுதந்திர உரிமை உள்ளது என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது தெரிவித்துள்ளார்.


அரசுதரப்பு கூறிவதைப் போல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கம் மாரிதாசுக்கு இருந்திருந்தால், டிவிட்டரில் பதிவிட்ட கருத்தை சில மணிநேரங்களிலேயே அவர் நீக்கியிருக்க மாட்டார் என்று கூறியுள்ள நீதிபதி, இதுகுறித்து புகார் அளித்ததாலேயே, அந்த கருத்து பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்று கூறியுள்ளார்.


இந்த வழக்கு உடனடியாக விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது விமர்சிக்கப்படுவதை தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி ஜி.ஆர்.சுவமிநாதன், அர்னாப் கோசாமிக்கும் மகாராஷ்ட்ரா அரசுக்கும் இடையிலான வழக்கின் உத்தரவில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதுபோல், குற்றம் சுமத்தப்பட்டவரின் தனிமனித சுதந்திரம் பறிக்கப்படும்போது, நீதிமன்றம் தலையிடுவது அதன் கடமை என்று நீதிபதி கூறியுள்ளார்.

2006 ஆம் ஆண்டு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஓர்ஹான் பமுக் (Orhan Pamuk) இரண்டு வகையான எழுத்தாளர்களை குறிப்பிடுவதாக நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார். அதில் ஒருவகை, எதைப்பற்றியும் சிந்திக்காமல், பின்விளைவுகளை யோசிக்காமல் எழுதுபவர் மற்றொரு வகை, விளைவுகளை சிந்தித்து நிதானமாக எழுதுவது என்று கூறியுள்ள நீதிபதி, மாரிதாசின் டிவிட்டர் பதிவு முதல் வகையை சேர்ந்தது என்றும் அதை உணர்ந்தவுடன் அவர் அதை நீக்கவிட்டார் என்றும் கூறியுள்ளார்.

இறுதியாக, மாரிதாசுக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ள புகாரில், “மாரிதாஸ் டிவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்களுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையில் பகைமையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது” என்று கூறியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி, “இதை ஆழ் மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் ஏற்பட்ட உள்நோக்கமற்ற தவறு என்று மாரிதாஸ் கருதலாம். நானும் இதை பெரிதாக்க விரும்பவில்லை. புகார் அளித்தவர் புகாரை ஏதோ ஒரு அவசரத்தில் எழுதியிருக்கலாம். முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ததே சட்டப்படி தவறு” என்று நீதிபதி தன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.


இதைத்தொடர்ந்து, மாரிதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *