

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களை கவுரவிக்கும் வகையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழகத்திற்கு சொந்தமான சுற்றுலா மையங்களில் இன்று (மார்ச் 8) ஒருநாள் மட்டும் கட்டணம் இன்றி பெண்கள் இலவசமாக சுற்றிப் பார்க்கலாம், என மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழக செயலர் ஜிதிஷ் ஜோய் தெரிவித்துள்ளார்.
பெண்கள் நாட்டின் கண்கள் என அனைவராலும் போற்றப்பட்டு வருகின்றனர். ஆண்களுக்கு நிகராக தற்போது எல்லாத் துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர். அவர்களை கவுரப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி ‘உலக மகளிர் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை ஆச்சர்யமூட்டும் வகையில் பல அதிசயங்கள் நிறைந்துள்ளன. இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில, வெளி நாட்டவர் என இங்கு பலரும் படையெடுத்து வருவதை காணமுடிகிறது. விடுமுறை நாட்களில் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அதிகளவு காணப்படும். கண்கவர் அழகிய பூங்கா, ராமக்கல் மேடு, பச்சைபசேல் என காணப்படும் புல்வெளி குன்றுகள், ஹில் வியூ பார்க், வாகமண் சாகச பூங்கா, அருவிக் குழி சுற்றுலா மையம், லேக் வியூ பாய்ன்ட், பாஞ்சாலி மேடு சுற்றுலா மையம் போன்றவை மனதிற்கு இதமளிக்கும் வகையில் அமைந்துள்ளன. மேலும் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, இன்று ஒரு நாள் மட்டும் பெண்கள் இலவசமாக சுற்றிப் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழக செயலர் ஜிதிஷ் ஜோய் தெரிவித்தார்.

