மாநிலங்களவை எம்.பி. தேர்தல் ஜூன் 10ஆம் தேதி நடைபெறுகிறது. , தமிழகத்திற்கு 6 இடங்களுக்கு போட்டி நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட அதிமுக உறுப்பினர்கள் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் மற்றும் திமுக உறுப்பினர்கள் ஆர்.எஸ். பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ராஜேஷ் குமார் ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் 29ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் ஜூன் 10-ம் தேதி நடைபெறவுள்ளது.
தமிழ் நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களில் 4 திமுக வசம் செல்ல வாய்ப்புள்ளது.அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக, பாஜக கட்சிகளை சேர்த்து 75 உறுப்பினர்கள் உள்ளனர். எனவே அவர்களுக்கு 2 பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம், பா வளர்மதி கோகுல இந்திரா செம்மலை ஆகியோர் கடும் போட்டியில் உள்ளனர். அதேபோல முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வேணுகோபால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜேசிடி பிரபாகர் மற்றும் செல்வராஜ் ஆகியோர் இடையேயும் கடும் போட்டி நிலவுகிறது.அதிமுகவில் 2 இடங்களுக்கு 60 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இந்த இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவி இடங்களுக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஒருவருக்கும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி ஆதரவாளர் ஒருவருக்கும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிடுவோருக்கான வேட்புமனு தாக்கல் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது. இதில் போட்டி ஏற்படும் நிலையில், ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.