கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு மக்கள் குறைகளை நிவர்த்தி செய்யக் கேட்டு அவ்வப்போது பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்தப் போராட்டங்களுக்கு ஒலிபெருக்கி அமைப்பதற்கும், நிழல் பந்தல் அமைப்பதற்கும் கொடிகள் கட்டுவதற்கும் காவல்துறை அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், கிள்ளியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பெல்லார்மின், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் உட்பட காங்கிரஸ் திமுக மார்க்சிஸ்ட் மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
இது குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பெல்லார்மின் கூறுகையில், ‘கடந்த அதிமுக ஆட்சியின்போது ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு முறையாக காவல்துறை அனுமதி வழங்காத நிலையில், தற்போது இந்த நிலைமை தொடர்வதாகவும் மக்கள் குறைகளை அரசுக்கு முன்வைப்பதற்கு நடைபெறும் ஜனநாயக ரீதியிலான போராட்டத்திற்கு ஒலிபெருக்கி நிழல் பந்தல் கொடிகள் அமைப்பதற்கும் அனுமதி வழங்க காவல்துறை மறுப்பதால் தற்போது மாவட்ட உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து முறை வைத்துள்ளதாகவும் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதாகவும் தெரிவித்தார்