அதிமுக ஒருங்கிணைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி இன்று காலமானார். இவர் கடந்த ஒரு வாரமாக குடல் இறக்க பிரச்சனை காரணமாக பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். 63 வயதான ஓ.பி.எஸ். மனைவியின் திடீர் மறைவு அதிமுக தொண்டர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் மீளா துயரில் ஆழ்த்தியுள்ளது.
ஓபிஎஸ் மனைவி மறைவுச் செய்தி குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். மருத்துவமனைக்கு சென்றதும் விஜயலட்சுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை அழைத்து முழு விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
அதன் பின்னர் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி சிகிச்சை பெற்று வந்த அறைக்குச் சென்ற முதலமைச்சர், ஓபிஎஸை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மனைவியின் திடீர் பிரிவால் துயரத்தில் ஆழ்த்திருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் அருகே அமர்ந்து மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார், அப்போது துக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் ஓ.பன்னீர்செல்வம் கண்ணீர் விட்டு அழுதார்.
அந்த அறையில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இருந்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர்கள் சேகர் பாபு, துரைமுருகன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் சென்று அஞ்சலி செலுத்தினர்.