அதிமுக ஒருங்கிணைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி இன்று காலமானார். இவர் கடந்த ஒரு வாரமாக குடல் இறக்க பிரச்சனை காரணமாக பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இதுகுறித்து ஓபிஎஸ் மனைவி சிகிச்சை பெற்று வந்த ஜெம் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் விரிவான மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் அ.இ.அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவியார் திருமதி.விஜயலட்சுமி (66) அவர்கள் உடல்நலக்குறைவால் சென்னை ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த பத்துத்தினங்களாக சிகிச்சைப்பெற்று வந்தார். உடல்நலமடைந்து, மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்ப இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 5:00 மணியளவில் தீவிர மாரடைப்புக்குள்ளானார். உடனடியாக இதயநோய் நிபணர்கள் தீவிரச்சிகிச்சை நிபுணர்கள் தக்கச்சிகிச்சையளித்தும் பயனின்றி காலை 6:45 மணியளவில் இயற்கையெய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.