

திமுக கூட்டம் ஒன்றில் திமுக மாநில மகளிரணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் பேசிய விதம் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. இந்த தேர்தலில் கொங்கு மண்டலம் மொத்தத்தையும் திமுக கைப்பற்றியுள்ளது. முக்கியமாக கோவை தேர்தல் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி உழைப்பால் திமுக மாபெரும் வெற்றியை கோவையில் பெற்றது. இதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தினார்.
இந்த நிலையில் தேர்தல் முடிந்த கையோடு கோவையில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மாநில மகளிரணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் கலந்து கொண்டார். அமைச்சர் செந்தில் பாலாஜி அந்த மேடையில் இருந்தார். கோவை மற்றும் மற்ற சில கொங்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் இந்த மேடையில் இடம்பெற்று இருந்தனர். தேர்தல் சீட் கிடைக்காத விரக்தியில் மாநில மகளிரணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் அந்த கூட்டத்தில் கடுமையாக பேசியது சர்ச்சையானது.
இந்நிலையில் மேடையில் அமைச்சர் இருக்கும் போதே கட்சி நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டி பேசியதால் தற்போது திமுகவில் இருந்து தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திமுகவின் இந்த நடவடிக்கையால் திமுகவினர் மேடையில் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் பார்த்து பேச வேண்டும் என்று மிரண்டு போய் உள்ளனர்.


