• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

வேன் மீது லாரி மோதி கோரவிபத்து.. 3 பெண்கள் பரிதாபமாக பலி!

தூத்துக்குடி துறைமுகம் மதுரை பைபாஸ் ரோட்டில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஒரு உலர் பூ  தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், சில்லாநத்தம் பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் வேலை செய்து வருகிறார்கள். இன்று காலை 6 மணியளவில் வேலைக்கு செல்வதற்காக கிராமங்களில் இருந்து 18 பேரை ஒரு வேனில் ஏற்றிக்கொண்டு ஓட்டப்பிடாரத்தில் இருந்து  உலர் பூ கம்பெனிக்கு சென்று கொண்டிருந்தது.

சில்லாநத்தம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது நயினார்புரம் கிராமத்திலிருந்து புதியம்புத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு தண்ணீர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது மோதியது.

இவ்விபத்தில் வேனில் பயணம் செய்த 18 தொழிலாளர்களும் காயமடைந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே புதியமுத்தூர் சில்லாநத்தம் தெற்கு தெருவை சேர்ந்த கணேசன் மனைவி செல்வராணி (45), ஓட்டப்பிடாரம் மூப் புலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி சந்தியா (48) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன்றி புதியம்புத்தூர் சில்லாநத்தம் மேலத்தெரு சேர்ந்த ரவீந்திரன் மனைவி காமாட்சி என்ற ஜோதி (40) உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.
மேலும் காயம்பட்ட 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தப்பிய லாரி ஓட்டுநரை தேடிவருகின்றனர்.