ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி ஓமாந்தூரார் மருத்துவமனையில், நெஞ்சு வலி காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். மேலும் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக கூறி அவரது மனைவி ஆட்கொணர்வு மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் செந்தில் பாலாஜிக்கு தனிப்பட்ட மருத்துவ சிகிச்சை வழங்க அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இதற்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்து நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அதில் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளனர். அத்துடன் ஆட்கொணர்வு மனுவுக்கு பதில் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தனர். மேலும் அமலாக்கத்துறை நியமிக்கும் மருத்துவர் குழுவும் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து ஆராயலாம் என தெரிவித்து வழக்கு விசாரணையை 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.