மொழி என்பது தேவை சார்ந்ததே தவிர திணிப்பு சார்ந்ததல்ல என கவிஞர் வைரமுத்து டிவிட் செய்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை கற்றுக்கொள்ளுங்கள், மாநிலங்கள் இந்தி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் வெகுண்டெழுந்து, தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானும், தனது டிவிட்டர் பக்கத்தில், பாரதிதாசனின் தமிழுக்கு அமுதென்று பெயர் என்ற கவிதையில் வரும் இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர் என்று பதிவிட்டு, ழகரம் ஏந்திய தமிழணங்கு என்ற வார்த்தைகளை தாங்கிய போட்டோவை பதிவிட்டுள்ளார். இந்நிலையில் கவிஞர் வைரமுத்தும் கண்டனம் தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.
அதில்,
‘வடக்கே வாழப்போன தமிழர்
இந்தி கற்கலாம்
தெற்கே வாழவரும் வடவர்
தமிழ் கற்கலாம்
மொழி என்பது
தேவை சார்ந்ததே தவிர
திணிப்பு சார்ந்ததல்ல
வடமொழி ஆதிக்கத்தால்
நாங்கள் இழந்த நிலவியலும் வாழ்வியலும் அதிகம்
இதற்குமேலும் இந்தியா?
தாங்குமா இந்தியா?’ என்று குறிப்பிட்டுள்ளார்.