
தென்னிந்திய ஊடக மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் ஏப்ரல் 9ம் தேதியான இன்று காலை 10 மணிக்கு தொடங்கி வைத்து பேசினார். இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த கருத்தரங்கம் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது.

தென்னிந்திய சினிமாவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உரித்தான பல கருத்தரங்குகள் இந்த மாநாட்டில் நடைபெற உள்ளது. ஓடிடியின் வளர்ச்சி, தியேட்டர்களை நோக்கி மக்களை அழைத்து வர செய்யும் முயற்சி, சினிமா மார்க்கெட்டை எப்படி விரிவுப்படுத்துவது என பல விஷயங்கள் இந்த மாநாட்டில் பேசப்பட உள்ளன. தக்ஷின் என பெயரிடப்பட்டுள்ள இந்த மாநாட்டை சத்யஜோதி பிலிம்ஸ் உரிமையாளர் தியாகராஜன் தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.
தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி தெலுங்கில் இருந்து இயக்குநர் ராஜமெளலி, மலையாளத்தில் இருந்து நடிகர் ஜெயராம், பகத் ஃபாசில் கன்னடத்தில் இருந்து நடிகர் சிவராஜ்குமார் என மொத்தம் 300க்கும் அதிகமான பிரபலங்கள் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டை தொடங்கி வைத்து நானும் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவன் தான் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியது பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. பின்னர், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஜெயம் ரவி முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சியை பாராட்டி பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலையில் பதவியேற்று இன்று இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வராக உள்ளார் மு.க. ஸ்டாலின் என நடிகர் ஜெயம் ரவி பாராட்டி பேசியுள்ளார். இயக்குநர் ராஜமெளலி, இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன் வைக்க உள்ளனர்.
