லக்கிம்பூர் வன்முறை விவகாரத்தில் உபி காவல்துறையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றும், உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கண்காணிப்புக்கு ஏன் உத்தரவிடக் கூடாது என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
லக்கிம்பூரில் அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டது, அதன் பிறகு ஏற்பட்ட வன்முறையில் பத்திரிகையாளர் உள்பட 4 பேர் கொல்லப்பட்டது என அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்கள் நாட்டையே உழுக்கியது.
இதுதொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே உத்தரப் பிரதேச அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று மீண்டும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இதில், உத்தரப் பிரதேச அரசு வழங்கியுள்ள அறிக்கையில் எந்த ஒரு விஷயமும் இல்லை, குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் அலைபேசிகள் கூட இன்னும் பறிமுதல் செய்யப்படாமல் இருப்பது ஏன் எனவும், பிரதான குற்றவாளி ஆஷிஷ் மிஸ்ராவைத் தவிர, மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் அலைபேசியே பயன்படுத்தவில்லை என சொல்ல வருகிறீர்களா என கேள்வி எழுப்பியதோடு, விசாரணையின் வேகம் எதிர்பார்த்த அளவு இல்லை என அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த விவகாரம் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும், அதற்காக சாட்சியங்களிடம் இருந்து முறையான வாக்குமூலங்கள் பெறப்பட வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் உங்கள் விசாரணை அறிக்கையை பார்த்தால் அந்த நம்பிக்கை எங்களுக்கு ஏற்படவில்லை,
எனவே நாங்கள் ஏன் இந்த விசாரணையை மேற்பார்வையிட உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கண்காணிப்புக்கு உத்தரவிட கூடாது என கேள்வி எழுபினர். அதற்கு வரும் வெள்ளிக்கிழமை பதிலளிப்பதாக உத்தரபிரதேச அரசு கூறியதையடுத்து வழக்கு வரும் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.