தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக இன்று கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தடைந்தார். அங்கு அவருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வந்த அவரை மாவட்ட கலெக்டர் அரவிந்த் ,தென்மண்டல ஐ.ஜி.அன்பு,டி.ஐ.ஜி.பிரவின்குமார் ஆகியோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.

பின்னர் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர் ,மாலை 4 மணிக்கு படகு சவாரி மூலம் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தி அங்கிருந்து விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்று தியானம் செய்கின்றார்.தொடர்ந்து விவேகானந்த கேந்திர வளாகம் சென்று விவேகானந்த கேந்திர நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபடும் அவர் அங்கிருந்து ராமாயண தரிசன கூடத்தை பார்வையிடுகின்றார்.
தொடர்ந்து நாளை அதிகாலையில் சூரிய உதயத்தை கண்டு ரசித்து, பின்னர் கன்னியாகுமரி பகவதியம்மனை குடும்பத்துடன் தரிசனம் செய்கின்றார்.
கவர்னர் வருகையை ஒட்டி மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் தலைமையில் காவல்கிணறு முதல் கன்னியாகுமரி வரை 500-கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.