• Thu. Apr 25th, 2024

கொரோனா 3வது அலைக்கு வாய்ப்பில்லை

Byகாயத்ரி

Nov 24, 2021

தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கொரோனா வைரஸ் பரவல் மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்திருந்தனர்.ஆனால், தீபாவளி முடிந்து மூன்று வாரங்களாகும் நிலையில், நாட்டில் வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. நாளொன்றுக்கு ஏற்படும் பாதிப்பு 8,000க்கு கீழ் குறைந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, முந்தைய 24 மணி நேரத்தில் புதிதாக 7,579 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இது, கடந்த 543 நாட்களில் மிகவும் குறைவாகும். இந்நிலையில், மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளதாக மருத்துவ நிபுணர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து, ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள அசோகோ பல்கலையின் இயற்பியல் மற்றும் உயிரியல் பிரிவு பேராசிரியர் கவுதம் மேனன் கூறியுள்ளதாவது: “இரண்டாவது அலையின்போது பலருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டு, அவர்கள் குணமடைந்துள்ளனர். இதனால், இயற்கையாகவே மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது.இதைத் தவிர, தடுப்பூசி போடும் பணியும் வேகமெடுத்துள்ளது. அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நம் நாட்டில் வைரசின் வீரியமும் குறைந்துள்ளது. அதனால், மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இல்லை. வைரசின் போக்கை எப்போதும் முழுமையாக கணிக்க முடியாது. புதிய உருமாறிய வைரஸ் ஏற்பட்டால், வரும் டிசம்பர் முதல் 2022 பிப்ரவரிக்குள் மூன்றாவது அலை பாதிப்பு ஏற்படலாம்.


ஆனாலும், அது இரண்டாவது அலையைப் போல மோசமானதாக இருக்காது. சமாளிக்கக் கூடியதாகவே இருக்கும். இருப்பினும், மக்கள் எச்சரிக்கையுடன், தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். தடுப்பூசி போடுவதால், வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. அதே நேரத்தில், பாதிப்பு ஏற்படாமல் இருக்க முகக் கவசம் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது போன்றவை மிக முக்கியம்” என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *