கேரள மாநிலத்திலிருந்து டிப்பர் லாரிகளில் மருத்துவ கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொண்டுவரப்பட்டு சொக்கம்பட்டி அருகே உள்ள சங்கனாபேரி பகுதியில் கொட்டப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில், புளியங்குடி டிஎஸ்பி சூரியமூர்த்தி ஆலோசனையின்படி, புளியங்குடி காவல் ஆய்வாளர் ராஜாராம், சொக்கம்பட்டி உதவி காவல் ஆய்வாளர் மாரிமுத்து, தனிப் பிரிவு தலைமை காவலர் பாலமுருகன், தலைமை காவலர்கள் விஜயபாண்டி, மதியழகன், சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட தனிப்படையினர் கடந்த சில நாட்களாக கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஆய்வு செய்து வந்தனர்!
இதில், வீரசிகாமணி மேட்டு தெருவைச் சேர்ந்த பாலையா மகன் வேல்முருகன் மற்றும் டிப்பர் லாரி ஓட்டுநர்கள் கேரள மாநில கழிவுகளை சங்கனாபேரி பகுதியில் கொட்டியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தனிப்படையினர் வேல்முருகனை கைது செய்து அவர் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிப்பர் லாரியின் ஓட்டுநர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, பொதுமக்களுக்கு நோய்த்தொற்றும் பரவும் வகையில் மருத்துவ கழிவுகளை தென்காசி மாவட்டத்தில் கொட்டுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் எச்சரித்துள்ளார்..