• Fri. Jan 24th, 2025

கவிதை: பேரழகனே !

பேரழகனே..,

சாமந்திப் பூ அழகு மேனியனே
நிலவுக்கும் சூரியனுக்கும்
நிகரற்ற ஒளி உடலே!

உன்னைப் பார்க்கையிலே
என் உள்ளத்திலே பரவுகின்ற புல்லரிப்பை

என் செய்யக் கண்ணா என் கண்ணா
கொல்லாதே என்னைக் கோவிந்தா

சலித்தெடுத்த உன் பார்வைக் குறும்பில் எதை மறைப்பேன்
என் கண்ணனே

உள்ளும் புறமும் உன் நினைப்பே
என் தேகம் முழுதும் நீயடா

நெருப்பாகச் சுழன்றடிக்கையில்
எது சுடுமென்னை நீ சூடும் வரையிலடா

புல்லாங்குழல் ஊதும் உன் நாதத்தை
உன் இதழ் சுவைக்க

ஏங்கும் என் இதழில்
ஏன் உன் இதழ் மதுக் கொண்டு

இதழ்ப் பற்றி அணைக்காமல்
நிற்கிறாய் பெருமாளாய்!

எதை அழிக்க
எண்ணவொன்னா உன்

பொற் சுவையில் கலந்திட்ட
நிர்மலத்தில் நிலையற்ற பின்?

பிரபஞ்சப் பெருவெளியில்
அழி என்னை மிச்சமில்லாதாக்கு

நீ நீர் விட்டு நான் ஆகுவாயடா
நாமாவோமடா

சிறு துளி நீர் தீண்டிடா
நிலவிற்குள் வா
நீ அணை தீ அணை!

உன் மடியில் எனை கிடத்தி
மீட்டிடும் மயக்கத்தில்…

நீர் தீண்டாத நிலவுடலில்
நதி பாயட்டும் என் கண்ணா!
என்பேரழகனே…

கவிஞர் மேகலைமணியன்