விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பொதுப் பாதையை ஆக்கிரமித்து தனிநபர்கள் வேலி அமைத்ததாக புகாரை அடுத்து பார்வையிட வந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பாதை ஏற்படுத்தி தர கோரிக்கை விடுத்தனர்.
அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி சின்னான்செட்டிபட்டி ஓடைத்தெருவில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தத் தெருவிற்கு செல்லும் பாதையில் தனிநபர்கள் ஆக்கிரமித்து வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஓடை தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் வேலியின் நடுவே உள்ள சிறிய பாதை வழியாக மட்டுமே தங்களின் வீடுகளுக்கு சென்று வருகின்றனர்.
இருசக்கர வாகனம் உட்பட மருத்துவ தேவைகளுக்காக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த வாகனமும் தெருவிற்குள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பாதையை பார்வையிட வந்த வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பத்திரத்தில் உள்ளது போல தங்களுக்கு பாதையை அளந்து தரவேண்டுமென அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வரும் சனிக்கிழமை அனைத்து அதிகாரிகளையும் வரவழைத்து அனைத்தையும் முறையாக அளந்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்து அங்கிருந்து சென்றனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், தாங்கள் பல வருடங்களாக பயன்படுத்தி வந்த பாதையை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும், இதனால் தங்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் அதிகாரிகள் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டினர். தங்களுக்கு பத்திரத்தின் படி அளந்து பாதையை ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.