தமிழகத்தில் நடைபெறக்கூடிய பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கான நகர்புற தேர்தலை நடத்துவது தொடர்பாக மதுரை மண்டல அளவில், மதுரை மடீட்சியா மஹாலில் தமிழக தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி மற்றும் ஆயத்த பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த தேர்தல் அதிகாரிகள், அலுவலர்கள், காவல்துறையினர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய தமிழக தேர்தல் ஆணையர் பழனிக்குமார் : உச்சநீதிமன்றம் 4 மாத கால அவகாசம் அளித்த நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தும் நிலை உள்ளது, நேரம் குறைவாக உள்ளதால் தேர்தலை நடத்துவதில் சவால்கள் உள்ளதால் சிரமத்தை பார்க்காமல் தேர்தலை சிறப்பாக நடத்த உதவ வேண்டும்.
எனவும், சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்த அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும், நவம்பர் -15ஆம் தேதிக்குள் ஈவிஎம் இயந்திரங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும், நவம்பர் 1ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடப்படும் எனவும், ஒலிம்பிக் போட்டியில் ஓடுவது போல நகர்புற உள்ளாட்சி தேர்தல் பணியை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.