• Thu. Mar 28th, 2024

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உடையவர் சாற்றுமுறை உற்சவம்..!

Byவிஷா

Apr 26, 2023

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாத திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி உடையவர் சாற்றுமுறை உற்சவம் நடைபெற்றது.
சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற ஸ்ரீ உடையவர் சாற்று முறை உற்சவத்தில், பழங்களால் அலங்கரிக்கப்பட்ட பந்தலில் எழுந்தருளி ஸ்ரீ உடையவருக்கு சேவை சாத்தினார் வரதராஜ பெருமாள்.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆன்மீக புரட்சி செய்த ஆழ்வாரான ராமானுஜரின் பிறந்த நாளான சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தை ஒட்டி ஸ்ரீ உடையவர் எனும் ராமானுஜருக்கு, வரதராஜ பெருமாள் சேவை சாத்தும் ஸ்ரீ உடையவர் சாற்று முறை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீ உடையவர் சாற்று முறை உற்சவத்தை ஒட்டி அத்திகிரி மலையில் இருந்து ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வெண்பட்டு உடுத்தி, கையில் தங்க கிளி வைத்து, நவரத்தின திருவாரணங்கள் அணிவித்து, மல்லிகைப்பூ, மனோரஞ்சித பூ, செண்பகப்பூ மலர், மாலைகள் அணிவித்து, மேளதாள, நாதஸ்வர வாத்தியங்கள் ஒலிக்க, வேத பாராயணம் கோஷ்டியினர் பாடி வர சன்னதி வீதியில் ஊர்வலமாக திருவடி கோவிலுக்கு சென்றார்.
பின்னர் கோவில் வளாகத்தில் ஆழ்வார் பிரகாரம் வழியாக ஸ்ரீ உடையவர் சன்னதிக்கு எழுந்தருளினார். உடையவர் சன்னதிக்கு எழுந்தருளிய வரதராஜ பெருமாளை எதிர் சேவை செய்து ராமானுஜப் பெருமான் சன்னதிக்குள் அழைத்துச் சென்றார். ஸ்ரீ உடையவர் சன்னதியில் மாம்பழம், வாழைப்பழம், அண்ணாசி பழம், திராட்சை, உள்ளிட்ட பல்வேறு பழங்களால் அலங்கரித்து அமைக்கப்பட்ட பழப்பந்தலில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், ராமானுஜருக்கு காட்சியளித்து தான் அணிந்து வந்த மாலையை அவருக்கு அணிவித்து, பரிவட்டம் கட்டி, ஸ்ரீ உடையவர் சாற்றுமுறை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஸ்ரீ உடையவர் சாற்று முறை உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வரதராஜ பெருமாளையும் ஸ்ரீ உடையவரையும் தரிசனம் செய்து வணங்கி வழிபட்டுச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *