காஞ்சிபுரம் சிங்கப்பெருமாள் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
எல்லோரும் சொர்க்கத்திற்கு செல்வதற்காக தான் ஒருவன் மட்டும் நரகத்திற்கும் சென்றாலும் பரவாயில்லை என்று கூறி அனைத்து தரப்பு மக்களும் அறியும் வண்ணம் ’ஓம் நமோ நாராயணா’ என்ற எட்டு எழுத்து மந்திரத்தை எல்லோருக்கும் எடுத்து உரைத்து, ஆண்டவன் முன் அனைவரும் சமம் எனும் சமத்துவத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிலைநாட்டி ஆன்மீகத்தில் புரட்சி செய்த ஆழ்வார் ஆன ராமானுஜர் அவதாரத் திருநாள் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தியாக வெகு விமர்சையாக வைணவ திருத்தலங்களில் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவேளுக்கை என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ அழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் ராமானுஜர் அவதரித்த சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தை ஒட்டி ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி உற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
அதன்படி, ஸ்ரீ அழகிய சிங்கப்பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து திருவாபரணங்கள் அணிவித்து மலர் மாலைகள் சூட்டி சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீ ராமானுஜர் சன்னதிக்கு எழுந்தருளினார்.
ஸ்ரீ ராமானுஜர் சன்னதிக்கு எழுந்தருளிய, ஸ்ரீ அழகிய சிங்கப்பெருமாள், ராமானுஜருக்கு காட்சியளித்து தான் அணிந்து வந்த மாலையை அவருக்கு அணிவித்து பரிவட்டம் கட்டி ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ அழகிய சிங்கப்பெருமாளையும் ஸ்ரீ ராமானுஜரையும் தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.