• Mon. May 6th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Oct 19, 2023

நற்றிணைப் பாடல் 276:

‘கோடு துவையா, கோள் வாய் நாயொடு
காடு தேர்ந்து அசைஇய வய மான் வேட்டு
வயவர் மகளிர்’ என்றிஆயின்,
குறவர் மகளிரேம்; குன்று கெழு கொடிச்சியேம்;
சேணோன் இழைத்த நெடுங் காற் கழுதில் கான மஞ்ஞை கட்சி சேக்கும்
கல் அகத்தது எம் ஊரே; செல்லாது
சேந்தனை, சென்மதி நீயே – பெரு மலை
வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு,
வேங்கை முன்றில் குரவையும் கண்டே

பாடியவர் : தொல் கபிலர்
திணை : குறிஞ்சி

பொருள் :

தலைவனே! கொம்பையூதி கௌவிக் கொல்லும் நாயோடு காட்டின் கண்ணே ஆராய்கின்ற விருப்பமுற்ற வலிய மானை வேட்டையாற் கொள்ளும் வேட்டுவ வீரரின் மகளிர் என எம்மைக் கூறுவீராயின்; வேட்டுவ மகளிரல்லேம் யாம் குறமகளிரேம் மலையிலிருக்கிற கொடிச்சியரேம்; தினை காவலன் கட்டிய நீண்டகாலையுடைய கட்டுப் பரணை; காட்டில் இருக்கின்ற மயில்கள் தாம் இருத்தற்குரிய பஞ்சரமாகக் கொண்டு அதன்கண்ணே தங்கா நிற்கும்; எம்மூர் இம் மலையினகத்ததாயிராநின்றது; ஆதலால், நீ இப்பொழுது நின்னூர்க்குச் செல்லாது எம்மூரை யடைந்து பெரிய மலையின் கண்ணே தோன்றி வளைந்த மூங்கிலாலாக்கிய குழாயில் நிரப்பி முற்ற வைத்த கள்ளைப் பருகி; வேங்கை மரத்தையுடைய முன்றிலிலே யாம் அயருங் குரவையையும் கண்டு மகிழ்ந்து பின் நாள் நின் ஊரை அடைவாயாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *