தாம்பரம் மாநகராட்சி 5-வது மண்டலத்திற்கு உட்பட்ட அகரம் தென் பிரதான சாலை, பதுவஞ்சேரி பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் ஆக்கிரமிப்பு செய்த காய்கனி கடையை அகற்றாமல் அரசு அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஏழை, எளிய நடுத்தர மக்கள் சிறு வியாபாரம் நடத்துவதற்காக வாடகைக்கு விடப்பட்ட இந்த வணிக வளாகத்தில், மாற்றுத்திறனாளியான சரவணன் என்பவர் கடையை வாடகைக்கு எடுத்து, கூடுதல் வாடகைக்கு முத்துராஜ் என்பவரிடம் விட்டுள்ளார். அவர் லட்சுமி காய்கனி அங்காடி என்ற கடையை நடத்தி வருகிறார்.

இந்த கடையின் உரிமையாளர் முத்துராஜ், சாலை விதிகளை மீறி கூடுதல் இடத்தை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும், அழுகிப்போன காய்கறி மற்றும் பழங்களின் கழிவுகளை சாலையில் கொட்டி விடுவதால், ரோட்டில் திரியும் மாடுகள் அங்கு மேய்வதாகவும் கூறப்படுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாவதுடன், விபத்துகளும் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் தாம்பரம் மாநகராட்சி தற்காலிக கண்காணிப்பாளர் சுமதி அவர்களிடம் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் கடையின் முன் வந்து ஆய்வு செய்த அதிகாரி சுமதி, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், கடைக்காரரிடம் அடிக்கடி சமரசமாக பேசி செல்வதாகவும், லஞ்சம் பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே இச்சம்பவம் குறித்து தமிழக அரசும், உயர் அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.