வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராளிகள் 21 பேரின் தியாகத்தைப் போற்றும் வகையில் விழுப்புரத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவையில் பேசியதாவது: பேரவைத் தலைவர் அவர்களே, 110 விதியின்கீழ் இந்த அறிவிப்பினை நான் வெளியிட விரும்புகிறேன். சமூக நீதிக் கொள்கையின் தாய்மடியாக விளங்கக்கூடிய மாநிலம் நம்முடைய தமிழ் மாநிலம். வகுப்புரிமை, வகுப்புவாரி உரிமை, இடஒதுக்கீடு, சாதிரீதியான ஒதுக்கீடு என்று எந்தப் பெயரைச் சொல்லி அழைத்தாலும், அதற்கு சமூகநீதி என்ற ஒற்றைச் சொல் கொடுக்கும் பொருளை வேறு எந்தச் சொல்லும் தருவது கிடையாது. அத்தகைய சமூகநீதிக் கொள்கைதான் திராவிட இயக்கம், இந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்குக் கொடுத்த மாபெரும் கொடையாகும்.
தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; இந்திய ஒன்றியத்துக்கே அந்தத் தத்துவத்தை திராவிட இயக்கம் கொடையாக வழங்கியது. வகுப்புரிமை (Communal G.O.) எனும் இடஒதுக்கீட்டு முறையை நூறாண்டுகளுக்கு முன் நடைமுறைக்குக் கொண்டு வந்தது நீதிக் கட்சிதான். மூடப்பட்டுக் கிடந்த கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரப் பதவிகள் அனைத்தும் அதன் மூலமாக அனைவருக்குமானது. சுதந்திர இந்தியாவில் அதற்குச் சட்டரீதியான இடர்பாடு வந்தபோது, தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக இருந்து முன்னெடுத்த போராட்டம்தான் அது. அந்தப் போராட்டம் இந்தியத் துணைக் கண்டத்தையே கவனிக்க வைத்தது. பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், அதனை அன்றைய பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு அவர்களிடத்திலே வலியுறுத்தியதன் காரணமாக, இந்திய அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டின் சமூகநீதிக் கொள்கைக்கு இந்திய அரசியல் சட்ட அங்கீகாரம் கிடைத்தது. அப்படி சமூகநீதியை அடைய, பல்வேறு போராட்டங்களை நடத்திய இயக்கம்தான் திராவிட இயக்கம். பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்குரிய இடஒதுக்கீட்டினை உறுதிப்படுத்தியதும், காலத்தின் தேவைக்கேற்ப அளவு மாற்றம் பெற்றுத் தந்ததும், கடந்த அரை நூற்றாண்டு கால வரலாற்றிலே இருக்கக்கூடிய சரித்திரச் சான்றாகும். அமைந்திருக்கிறது. அது யாராலும் மறைக்க முடியாத சாசனமாக
சமூகநீதிக்கான தொடர்ச்சியான போராட்டங்களின் வரிசையில், 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு கோரி வடதமிழகத்தில் நடந்த போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் போராட்டத்தில், அன்றைய அரசின் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானவர்கள் 21 பேர். சமூகநீதிப் போராளிகளான அவர்களுடைய உயிர்த் தியாகத்திற்கும், போராட்டத்திற்கும் நியாயம் வழங்கிடும் வகையில், 1989 ஆம் ஆண்டு அமைந்த முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான அரசு, இந்தியாவிலேயே முதன்முறையாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை அமைத்துக் கொடுத்து, அவர்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீட்டினை வழங்கி, (மேசையைத் தட்டும் ஒலி) கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் சம வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அவர்களுடைய முன்னேற்றத்திற்கான பாதையை வகுத்துத் தந்தது.
சமூகநீதிக் கொள்கையின் தொடர்ச்சியாக, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களது வழியில் செயல்படக்கூடிய நம்முடைய அரசு, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில் வன்னிய சமுதாயத்தினருக்கான 10.5 விழுக்காடு நடைமுறைப்படுத்தியிருக்கிறது. தனி ஒதுக்கீட்டினை சட்டப்பூர்வமாக ஒடுக்கப்படும் சமுதாயம் எதுவாக இருந்தாலும், அதன் உரிமைகள் காக்கப்பட வேண்டும்; மீட்கப்படவேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக் கழக அரசினுடைய உயர்ந்த நோக்கமாகும். அத்தகைய தியாகிகளின் பங்களிப்பை நினைவுகூர்ந்து, 1987 ஆம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தில் காவல் துறையினுடைய துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான 21 சமூகநீதிப் போராளிகளின் தியாகத்தை மதிக்கக்கூடிய வகையிலே, ரூபாய் 4 கோடி மதிப்பீட்டிலே, விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது நான் அளித்த வாக்குறுதி இது. யார் மறந்திருந்தாலும், நிச்சயம் நான் மறக்கவில்லை; யாரையும் மறக்கமாட்டேன்.
“நான் சமுதாயத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவன். மிகவும் பின்தங்கிய வகுப்பினர் பட்டியலில் என் வகுப்புக்கு ஓர் இடம் உண்டு. நான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பதால், பின்தங்கிய வகுப்பினர் நலனுக்காக என் உயிரையே பணயமாக வைத்துப் போராடுவேன்” என்று தமிழ்நாடு சட்டமன்றத்திலே அன்றைக்கு முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் சொன்ன வாசகம் இது. அந்த உறுதிமொழியை நானும் ஏற்றுக் கொண்டுள்ளதன் அடையாளம்தான் இந்த அறிவிப்பு என்பதை நான் இந்த
மாமன்றத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
வேல்முருகனும், கோ.க. மணி அவர்களும் இதுகுறித்துப் பேசுகிற நேரத்தில், பாராட்டி நன்றி தெரிவித்துப் பேசினார்கள். அதே நேரத்தில், ஒருசில கோரிக்கைகளையும் எடுத்து வைத்திருக்கிறார்கள். நான் அவர்களுக்குச் சொல்ல விரும்புவது, ஏற்கெனவே கழக ஆட்சிக் காலத்திலே, கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரத்திலே, உயிர்நீத்த அந்த 21 தியாகிகளின் குடும்பத்தினருக்கு தலா 3 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல, அவர்களது குடும்பத்தினருக்கு பென்ஷன் தொகையாக மாதம் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில் நான் இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். அரசு வேலைவாய்ப்பை அவர்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். நிச்சயமாக அதுகுறித்து ஆய்வு செய்து, அரசு சார்ந்த நிறுவனங்களிலே, கல்வித் தகுதியின் அடிப்படையிலே நிச்சயமாக அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற அந்த உறுதியையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.