குன்னூரில் கடந்த வாரம் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட ஒரே நபரான குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக விமானப் படை அறிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 8, கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர், ஊட்டி வெலிங்டன் ராணுவ பயிற்சி பள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தது. நண்பகல் 12.20 மணி அளவில் குன்னூர் அருகே, காட்டேரி என்ற பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதன் பின்னர் சுமார் ஒரு மணி நேரமாக பற்றி எரிந்த ஹெலிகாப்டரில் தலைமை தளபதி பிபின் ராவத், மற்றும் அவரது மனைவி மதுலிகா உள்பட 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் சென்ற 14 பேரில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் உயிர் பிழைத்திருந்தார்.
படுகாயமடைந்த அவர், வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின் மேல்சிகிச்சைக்காக பெங்களூரு கொண்டு செல்லப்பட்டு ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி குரூப் கேப்டன் வருண் சிங் இன்று காலை உயிரிழந்ததாக, விமானப் படை அறிவித்துள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்பிழைத்த ஒரே அதிகாரியும் மரணம் அடைந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதிகாரி வருண் சிங் மறைவுக்கு விமானப் படை இரங்கல் தெரிவித்துள்ளது.