• Thu. Apr 25th, 2024

எழுதுவது குறித்து உலக எழுத்தாளர்கள் என்ன சொல்கிறார்கள் ?

தங்களது எழுத்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுகின்றனர்.ஆனால் நடுவினில் சிறு தயக்கம் இதனை எப்படி கையாள்வது.சுவாரஸ்யத்தை கூட்டுவது, புரட்சிகரமாக எடுத்துரைப்பது, என பல்வேறு இடங்களில் நிலை தடுமாறுகின்றனர்.
இன்றைய வளர்ந்து வரும் காலகட்டத்தில் எழுத்து ,எழுதுவது , வாசிப்பது போன்ற பழக்கங்கள் மிகவும் குறைந்து வருகின்றன.இதனால் எழுத்து பழக்கம் குறைவதினால் ஒரு சிலருக்கு தங்களது கையெழுத்து கூட புரியாமல் எழுத முடியாமல் உள்ளனர்.
எழுத்து குறித்தும் எழுதுவது குறித்தும் உலக எழுத்தாளர்கள் கூறியவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. வாருங்கள் எழுத்தாளர்களுடன் பயணிப்போம்.

ஜார்ஜ் ஆர்வல் (George Orwell):

என்னைப் பொருத்தவரையில் எழுதுவதற்கு நான்கு விஷயங்கள் துணைபுரிகின்றன. அது ஒவ்வொரு எழுத்தாளருக்கும், அவரவர் வாழும் இடத்துக்கும் காலத்திற்கும் ஏற்றவாறு மாறுபடும். அவை:

  1. ஈகோ: புத்திசாலியாக இருக்க விழைவது, தன்னைப் பற்றி பிறர் பேச வேண்டும் என எண்ணுவது, தான் இறந்த பின்னும் நினைவுகூரப்பட வேண்டும் என நினைப்பது, சிறுவயதில் தாழ்த்தியவர்கள் முன் உயர்ந்து வாழ நினைப்பது… இப்படி! எழுத்தாளர்கள் மட்டுமில்லாது அறிவியலர்கள், கலைஞர்கள், அரசியலர்கள், வழக்குரைஞர்கள், படை வீரர்கள் மற்றும் தொழில்முனைவோர்களிடமும் இத்தகைய தன்மையைக் காணலாம்.
    மனிதர்களில் பெரும்பாலானவர்கள் நாம் நினைப்பதுபோல் கடுமையான சுயநலர்கள் அல்ல. 30 வயது ஆனவுடனேயே அவர்கள் தனிமனிதர் எனும் உணர்வை மெல்ல இழக்கலாகிறார்கள். பிறருக்காக வாழ ஆரம்பிக்கிறார்கள். கடின உழைப்பில் மூழ்குகிறார்கள். மனிதர்களில் ஆசீர்வதிக்கப்பட்ட சிலர் உள்ளனர். அவர்கள்தான் வாழ்வின் கடைசி வரை, தங்கள் வாழ்க்கையைத் தங்களுக்காகத் துணிச்சலோடு வாழ்வார்கள். எழுத்தாளர்கள் இந்த வகையில் அடங்குவர். இதில் தீவிர எழுத்தாளர்கள், பொருளீட்டுவதில் அதிக ஆர்வமில்லாதவர்களாகவும், அதிக தன்முனைப்போடும் செயல்படுவார்கள்.
  2. அழகியலில் மீதான ஆர்வம்: புற உலகின் அழகியல் மீதான ஆர்வம், வார்த்தைகள் மற்றும் அவற்றின் சரியான ஒழுங்கமைவு, நல்ல உரைநடையின் தன்மையில் அல்லது நல்ல கதையின் தாளத்தினால் உண்டாகும் மகிழ்ச்சி, தவறவிடக் கூடாத மதிப்புமிக்க ஓர் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுவது எனச் சொல்லலாம். நிறைய எழுத்தாளர்களுக்கு அழகியல் நோக்கம் மிகவும் பலவீனமாக உள்ளது. துண்டுப் பிரசுரம் எழுதுபவர்கள் அல்லது பாடப்புத்தகங்கள் எழுதுபவர்கள்கூட அழகியல் உணர்வோடு இருக்கிறார்கள். எந்தப் புத்தகமும் அழகியல் நோக்கத்திலிருந்து விடுபட்டது இல்லை.
  3. வரலாறு மீதான தேட்டம்: விஷயங்களை அதன் தன்மையிலேயே காண்பது, விஷயங்களின் உண்மைத்தன்மையைக் கண்டறிவது, அதைப் பிற்கால சந்ததியினருக்குக் கொண்டுசேர்க்க வேண்டும் என்று நினைப்பதும் ஒரு காரணம்.
  4. அரசியல் நோக்கம்: – அரசியல் என்ற வார்த்தையை நான் பரந்த அர்த்தத்தில் பயன்படுத்துகிறேன். உலகத்தை ஒரு குறிப்பிட்ட திசையில் செலுத்த வேண்டும் என்ற விருப்பம், சமுதாயத்தைப் பற்றிய சிந்தனையை மாற்ற முனைதல். உண்மையில், எந்தப் புத்தகமும் அரசியல் சார்பிலிருந்து விடுபட்டிருப்பது இல்லை. கலைக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இருக்கக் கூடாது என்ற கருத்தே ஓர் அரசியல் அணுகுமுறைதான்!

மிலன் குந்தேரா (Milan Kundera):

அன்னா கரீனா நாவலின் முதல் வரைவில் டால்ஸ்டாய், அன்னாவைப் பரிவு இல்லாத பெண்ணாகவும், அவளுக்கு ஏற்பட்ட துயர முடிவுக்கு அவள் தகுதியானவள்தான் என்பதுபோலும், அவளுக்கு அது நியாயமான முடிவு என்பதாகவும் கதையை எழுதினார். ஆனால், இறுதி வடிவில் நாவல் வேறொன்றாக மாறியது. இடைப்பட்டக் காலத்தில் டால்ஸ்டாயின் அறரீதியிலான பார்வை மாறியிருக்கும், அதனால் நாவல் வேறொன்றாக மாறியது என்று நான் நினைக்கவில்லை. மாறாக, நாவலை எழுதும் செயல்பாட்டில், கதையிலிருந்து உருவாகிவரும் ஒரு குரலுக்கு அவர் செவி மடுத்திருப்பார் என்றே நினைக்கிறேன். நான் அதை எழுத்தாளருக்கு அந்த நாவல் அளிக்கும் ஞானம் என்று குறிப்பிட விரும்புகிறேன். ஒவ்வொரு உண்மையான நாவலாசிரியனும் அந்தக் குரலுக்கு செவிமடுப்பான். அதனால்தான் பெரும் படைப்புகள் அதை எழுதிய ஆசிரியனைவிட சற்றுக் கூடுதல் அறிவார்ந்ததாக இருக்கிறது. தான் எழுதும் நாவலைவிட அதிக அறிவு கொண்டவனாக ஒரு நாவலாசிரியன் இருப்பான் என்றால், அவன் வேறு எதாவது வேலைக்குத்தான் செல்ல வேண்டும். ஒட்டுமொத்தத்தில் நாவல் உண்மையை அல்ல, மனித இருப்பின் சாத்தியத்தை ஆராய்கிறது.

விளாதிமிர் நபொகோவ் (Vladimir Nabokov):

ஓர் எழுத்தாளனை மூன்று விதங்களில் அணுக முடியும். கதைசொல்லி, ஆசிரியர், மாயவியர். பெரும் படைப்பாளி இந்த மூன்றையும் கொண்டவனாக இருப்பான். எனினும், மாயவியரே அவரிடம் அதிகம் வெளிப்படுவார். அதுவே அவரைப் பெரும் படைப்பாளியாக மாற்றுகிறது.
கதைசொல்லியிடம் நாம் பொழுதுபோக்கை, வியப்பூட்டுதலை, உணர்ச்சியை, உற்சாகமான ஒரு பயணத்தை எதிர்பார்க்கிறோம். எழுத்தாளனிடம் ஆசிரியனைத் தேடுபவர்கள், அவனிடம் பிரச்சாரகர், ஒழுக்கவியர், தீர்க்கதரிசியை எதிர்பார்ப்பார்கள். அற விழுமியங்களுக்காகப் பொது விஷயங்களைத் தெரிந்துகொள்ளவும், அறிவை வளர்த்துக்கொள்ளவும் நாம் ஓர் எழுத்தாளனிடம் ஆசிரியனைத் தேடுவோம். ஆனால், எல்லாவற்றுக்கும் மேலானது, ஓர் எழுத்தாளன் மாயவியராக இருப்பதுதான். அத்தகைய எழுத்தாளரின் மேதமையையும் தனித்துவத்தையும் அவரது படைப்புகளின் பாணியையும் நாம் உணர முயற்சிக்கையில் உண்மையான கலை உணர்வை அடைகிறோம். அந்த மாயத்தில் மூழ்க விரும்பும் வாசகன், புத்தகத்தை இதயத்தாலோ, மூளையாலோ அல்ல தண்டுவடத்தால் படிப்பான். அப்போது வாசிப்பு இன்பமும், அறிவின்பமும் நம்முள் கிளர்ந்தெழ, எழுத்தாளன் சீட்டுக்கட்டுகளைக் கொண்டு கட்டும் கோட்டையானது பளபளக்கும் கண்ணாடி மாளிகையாக மாறுவதைத் தரிசிப்போம்.

ஜேம்ஸ் பால்ட்வின் (James Baldwin):

நீங்கள் உண்மையில் எழுத்தாளனாக ஆகப்போகிறீர்கள் என்றால், உங்களை எவராலும் தடுக்க முடியாது. அதேபோ,அ நீங்கள் எழுத்தாளனாக ஆகப்போவதில்லையென்றால், யாராலும் உங்களுக்கு உதவிசெய்யவும் முடியாது. உங்கள் பயணத்தின் ஆரம்பத்தில் உங்களுக்குத் தேவைப்படுவது, எழுதுவதற்குக் கடின உழைப்புத் தேவை என்று எவராவது உங்களிடம் தெரிவிப்பது மட்டும்தான்.
என்னைப் பொருத்தவரையில் எழுத்து என்பது, நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பாத, கண்டடைய விரும்பாத ஒன்றை நோக்கியப் பயணம்தான்.
எளிமை. அதுதான் உலகத்தின் மிகவும் கடினமான விசயம். அச்சுறுத்தும் விசயமும்கூட. உங்களுடைய அனைத்து வேடங்களையும் நீங்கள் கழற்ற வேண்டும். அவற்றில் சில உங்களிடம் இருக்கிறது என்பதுகூட உங்களுக்குத் தெரியாது. எலும்பைப் போல் சுத்தமாக இருக்க வேண்டும் உங்களுடைய வார்த்தைகள்.

வில்லியம் ஃபாக்னர் (William Faulkner):

என் கையில் கிடைக்கும் அனைத்தையும், எந்த ஒரு முன் தீர்மானமும் இல்லாமல் நான் வாசிப்பேன். அப்படி வாசித்ததுதான் என்னுள் தாக்கம் செலுத்தியிருக்கிறது. அதுதான் என் எழுத்துகளில் வெளிப்படுகின்றன. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் இது பொருந்தும் என்று நினைக்கிறேன். அவன் படிப்பவை மட்டுமல்ல, அவன் கேட்கும் இசை, அவன் பார்க்கும் படங்கள் என ஓர் எழுத்தாளன் அனுபவிக்கும் எந்த அனுபவமும் அவனது படைப்புகளில் தாக்கம் செலுத்தவே செய்யும்.


வாசியுங்கள், வாசியுங்கள், வாசியுங்கள் எல்லாவற்றையும் – குப்பை, கிளாசிக், நல்லது, கெட்டது என எல்லாத்தையும் – வாசியுங்கள். தச்சன் தொழில் கற்றுக்கொள்வது போலத்தான் அது. வாசியுங்கள். அது உங்களுக்குள் ஊடுறுவும். பிறகு எழுத ஆரம்பியுங்கள். அது நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதை நீங்களே கண்டறிவீர்கள். நன்றாக இல்லையென்றால் தூக்கி எறிந்து விடுங்கள்.

எர்னெஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway):

ஒரே நேரத்தில் நிறைய எழுதக் கூடாது என்பதுதான் எழுதுவது குறித்து நான் கற்றுக்கொண்ட முக்கியமான பாடம். ஒரே நாளில் எல்லாவற்றையும் எழுதித் தீர்த்துவிடாதீர்கள். மறுநாளுக்கு சற்று மீதம் வைத்திருங்கள். எப்போது நிறுத்த வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பதுதான் இதில் முக்கியமான விஷயம். நன்றாக எழுதிக் கொண்டிருக்கும்போது, சுவாரஸ்யமான இடத்தை வந்தடையும்போது, அடுத்து என்ன வரப்போகிறது என்பது உங்களுக்குத் தெரியும்போது எழுதுவதை நிறுத்திவிட வேண்டும். அதன் பிறகு அதைப் பற்றி சிந்திக்கக் கூடாது. உங்களுடைய ஆழ்மனம் அந்த வேலையைச் செய்துகொள்ளும்.


நல்ல தூக்கத்துக்குப் பிறகு மறுநாள் காலையில் நீங்கள் புத்துணர்வுடன் இருக்கும்போது, முந்தைய நாள் எழுதியதை திருத்தி எழுதுங்கள். முந்தைய நாள் நிறுத்திய இடத்துக்கு வந்தபிறகு அங்கிருந்து புதிதாக எழுதத் தொடங்குங்கள். அடுத்த உச்சத்தை அடையும்போது நிறுத்திக்கொள்ளுங்கள். இவ்வாறு நீங்கள் உங்கள் நாவலை எழுதுகையில் அதன் ஒவ்வொரு பகுதியும் சுவாரஸ்யமானதாக இருக்கும். நீங்கள் எந்த இடத்திலும் தடுமாறி நிற்கமாட்டீர்கள். எழுதுவதே சுவாரஸ்யமன செயல்பாடாக மாறிவிடும். ஒவ்வொரு நாளும் முந்தைய நாள் எழுதியதைத் திருத்தி, தேவையற்றதைத் தூக்கி எறிந்துவிட வேண்டும். நீங்கள் எவற்றையெல்லாம் வேண்டாம் என்று தூக்கிப் போடுகிறீர்களோ அதன் மூலமே நீங்கள் நன்றாகதான் எழுதிக்கொண்டிருக்கிறீர்களா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். நீங்கள் தூக்கி எறியும் பகுதி, வேறு ஒருவருக்கு சுவாரஸ்யமான ஒன்றாக தோன்றும்பட்சத்தில் நீங்கள் நன்றாக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
எழுதுவதற்கு நிறைய இயந்திரத்தனமான உழைப்பைப் போட வேண்டி இருப்பதை நினைத்து சோர்வடைய வேண்டாம். வேறுவழியில்லை. அது அப்படித்தான். ‘எ ஃபேர்வல் டு ஆர்ம்ஸ்’ (A Farewell to Arms) நாவலை நான் குறைந்தது ஐம்பது முறை திருத்தி எழுதினேன். முதல் வரைவு என்பது எப்போதும் குப்பையாகத்தான் இருக்கும்.


உண்மையில் உங்களிடம் எழுத்துத் திறமை ஒளிந்திருக்குமெனில், அது என்றாவது ஒருநாள் வெளிப்படும். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான், அது உங்களிடம் வெளிப்படும் வரையில் விடாது தொடர்ச்சியாக எழுத வேண்டும். அது கடினமானதுதான். நான் பத்து கதைகள் எழுதுகிறேன் என்றால் அதில் ஒரு கதைதான் நன்றாக இருக்கும். மீதமுள்ள ஒன்பது கதைகளை நான் தூரத்தான் வீசுகிறேன். நீங்கள் எழுத ஆரம்பிக்கையில் எல்லாரும் உங்களைத் தட்டிக்கொடுப்பார்கள். நீங்கள் நன்றாக எழுதத் தொடங்கியதும் உங்களை அழிக்க முயல்வார்கள். நீங்கள் தொடர்ந்து மேலே இருக்க வேண்டுமெம் என்றால், நல்லப் படைப்புகளைத் தருவதைத் தவிர வேறு வழியில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *