ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சமீபத்தில் மறைந்ததையடுத்து, காலியாக உள்ள அத்தொகுதி இடைத்தேர்தலில் தவெக போட்டியிடுமா என்பது குறித்து தவெக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக விஜய் கட்சியை ஆரம்பித்திருந்த இந்நிலையில், தற்போது இந்த இடைத்தேர்தலில் அவர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்து அவர் கட்சி நிர்வாகிகளிடம் பேசியதாக கூறப்படுகிறது. அதில், வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் தான் நம்முடைய இலக்கு இடைத்தேர்தல் குறித்து கவலைப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார். அதோடு கட்சிக்குள் எந்த ஒரு சலசலப்புக்கும் இடம் கொடுக்காமல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவளிக்க மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாத நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.