• Sun. Mar 26th, 2023

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் தென்னரசு அறிமுக விழா- இபிஎஸ் ஆவேசம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை அறிமுக கூட்டத்தில் தேர்தலில் அதிகாரிகள் எச்சரிக்கும் விதமாக இபிஎஸ் ஆவேசபேச்சு
அதிமுக வேட்பாளரை அறிமுக கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பாஜக நிர்வகிகள், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி உள்பட அதிமுக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் வைக்கப்பட்டு இருந்த மேடையின் பின்புறம் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தலைவர்களின் படமும் இடம் பெற்றிருந்தது. அந்த வகையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை படமும் பேனரில் இடம் பெற்றிருந்தது. தொடர்ந்து வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும். அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு சிந்தாமல் சிதறாமல் உங்கள் வாக்குகளை செலுத்துங்கள்.திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்று 21 மாதங்கள் ஆகியுள்ளது ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை.


எம்.ஜி.ஆர் ஆட்சியில் தான் ஈரோடு மாவட்டம் என்ற புதிய மாவட்டம் உருவானது. ஈரோடு மாவட்டம் வளர்ச்சி பெறுவதற்கு அடித்தளம் அமைத்த கட்சி அதிமுக. காற்றை தடுக்க முடியாது அதேபோல அதிமுகவின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளுங்கள்.. ஏனெனில் அது உங்கள் பணம்தான். பொதுமக்களின் பணம். கொள்ளையடித்து வைத்து இருக்கிறார்கள். கொள்ளையடித்து வைத்த பணத்தை வாரி இறைக்கிறார்கள். திறமையற்ற முதல்வர் ஸ்டாலின் நாட்டை பாழ்படுத்தி வருகிறார். நாட்டில் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் முதல்வர் எப்போதும் குடும்பத்தை பற்றித்தான் சிந்திக்கிறார். நாட்டு மக்களைப் பற்றி அல்ல.
தமிழகத்தில் ரவுடிகள், குண்டர்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது. இதுதான் திமுக அரசின் சாதனை.இலவச வேட்டி, சேலை உற்பத்திபணியை ஈரோடு பகுதி விசைத்தறியாளர்களுக்கு திமுக அரசு கொடுக்கவில்லை. இதனால், விசைத்தறி தொழில் நலிவடைந்து, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அரசின் எல்லா துறைகளிலும் ஊழல் நடக்கிறது. யார் கட்சித் தலைமைக்கு அதிகமாக நிதி கொடுக்கிறார்களோ, அவர்கள் சிறந்த அமைச்சர் என பாராட்டப்படுகின்றனர்.
அப்படிப்பட்ட ஒரு அமைச்சர், இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்பதை தடுக்க மக்களை மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளார். இவற்றை எல்லாம் தேர்தல் அதிகாரி வேடிக்கை பார்க்கிறார். ஆட்சி மாறும்போது காட்சி மாறும். அரசு அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும். ஜனநாயக முறைப்படி செயல்படாமல், எதிரியாக செயல்பட்டால், எதிர்வினையை நிச்சயமாக சந்திப்பீர்கள்.ஈரோடு கிழக்கு தொகுதியில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ்தான் போட்டியிடுகிறது. அதற்கு 20 அமைச்சர்கள் இங்கு தேர்தல் பணியில் உள்ளனர். அவர்களது பயமே நமது வெற்றிக்கு அறிகுறி. திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில், தரமற்ற பொருட்களை வழங்கி, ரூ.500 கோடி ஊழல் செய்துள்ளனர். இவ்வாறு பேசினார்.
ஈரோடு தொகுதி வேட்பாளர் தென்னரசு அறிமுக விழா முழுவதுமே பொதுமக்களை பார்த்தபடி கைகூப்பிய படியே சிரித்த முகத்துடன் இருந்தது அனைவரையும் கவர்ந்தது. அவருக்கு வாக்களிக்க முடிவுசெய்திருப்பதாக பொதுமக்கள் பேசிக்கொண்டனர்.கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், கூட்டணிக் கட்சி தலைவர்களான ஜி.கே.வாசன், சி.பி.ராதாகிருஷ்ணன், கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *