முல்லைப் பெரியாறு அணையில் மரங்களை வெட்ட அனுமதி வழங்கிய கேரள அரசு, அதனை தீடிரென திரும்பப் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் மரங்களை வெட்ட அனுமதி வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணையின் பேபி அணையை பலப்படுத்தும் நடவடிக்கைக்காக 15 மரங்களை வெட்ட கேரளாவிடம் தமிழக அரசு அனுமதி கோரியிருந்தது. இதற்கு 15 மரங்களை வெட்ட தமிழகத்துக்கு அனுமதி அளித்து கேரளா தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலினும் நன்றி தெரிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், தங்களை கேட்காமலேயே வனத்துறை அதிகாரிகள் தமிழகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் அம்மாநில அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பிய நிலையில், தமிழகத்துக்கு மரம் வெட்ட கொடுத்த அனுமதியை ரத்து செய்வதாக கேரள அரசு உத்தரவிட்டது. இதனால் தமிழகத்திற்கு சிக்கல் ஏற்பட்டது. எனவே, மரங்களை வெட்ட அனுமதிக்க கோரி கேரள அரசுக்கு உத்தரவிட தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.