• Mon. Jan 20th, 2025

முகுந்தன் தான் பாமக இளைஞர் அணித்தலைவர்… டாக்டர் ராமதாஸ் தடாலடி!

ByIyamadurai

Jan 2, 2025

“முகுந்தனை இளைஞர் அணித் தலைவராக நியமித்ததில் எவ்வித மாற்றமுமில்லை” என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாமக, சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. அப்போது, ராமதாஸ் மகள் வழி பேரன் முகுந்தன் பரசுராமனை கட்சியின் இளைஞரணி தலைவராக அறிவித்தார். இதனை, ராமதாஸின் மகனும், கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணி ஏற்க மறுத்தார். அப்போது, ” கட்சியில் சேர்ந்த 4 மாதங்களில் இளைஞரணி தலைவர் பொறுப்பு கொடுக்காதீர்கள். அவருக்கு என்ன அனுபவம் இருக்கும் களத்தில் இருத்து வேலை செய்வதற்கு?” என எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் டாக்டர் ராமதாஸ் டென்ஷன் ஆனார். ” நான் சொல்வதை தான் யாராக இருந்தாலும் கேட்க வேண்டும். இது நான் உருவாக்கிய கட்சி. கேட்காதவர்கள் கட்சியில் இருக்க முடியாது. புரியுதா? கட்சியை விட்டு போவதாக இருந்தால் போ” என கோபமாக கூறினார். அதுமட்டுமின்றி, இது நான் உருவாக்கிய கட்சி என்று திட்டவட்டமாக அறிவித்தார். அப்போதும் அன்புமணி ராமதாஸ் பேச்சின் போது கமெண்ட் செய்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “கட்சியின் தலைவர், நிறுவனர் போன்ற உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கோபப்படாமல் நடந்து கொள்ள வேண்டும். சாந்தமாக பதில் சொல்ல வேண்டும். திமுகவும், பாமகவும் கூட்டணியில் இருந்தபோது கலைஞரிடம் பத்திரிகையாளர்கள் ஒரு கேள்வி கேட்டனர். ‘கூட்டணியில் இருந்து கொண்டே டாக்டர் ராமதாஸ் உங்களை தினமும் விமர்சிக்கிறாரே?’ என்ற அந்த கேள்விக்கு , ‘தைலாபுரத்திலிருந்து எனக்கு தினமும் தைலம் வருகிறது’ என்று கலைஞர் பதில் கூறினார். இவ்வாறு நளினமாகவும் நாகரீகமாகவும் பதில் அளிப்பதற்கு கலைஞரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

அன்புமணியுடன் எனக்கு கருத்து வேறுபாடு இருந்தது. அதற்குப் பிறகு அவர் இங்கே வந்து பேசினார். அதன் பின் எல்லாம் சரியாகிவிட்டது. பாமக மாநில இளைஞர் அணித் தலைவர் பொறுப்பில் முகுந்தன் நீடிக்கிறாரா என்ற பேச்சுக்கே இடமில்லை. அதில் எந்தவித மாற்றமும் இல்லை. பொதுக்குழு முடிந்த மறுநாளே அவருக்கு நியமன கடிதமும் டைப் அடித்துக் கொடுத்து விட்டேன். முகுந்தனை இளைஞர் அணித் தலைவராக நியமித்ததில் எவ்வித மாற்றமுமில்லை” என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.