• Fri. Apr 26th, 2024

10 ஆண்டில் செய்ய வேண்டிய சாதனைகளை ஒரே ஆண்டில் செய்துள்ளது தி.மு.க. அரசு.

ByA.Tamilselvan

Apr 30, 2022

தேனியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ஒவ்வொரு தனிமனிதனுடைய தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக அரசினுடைய இலக்கு. 10 ஆண்டில் செய்ய வேண்டிய சாதனைகளை ஒரே ஆண்டில் செய்துள்ளது தி.மு.க. அரசு.என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் தற்போது திண்டுக்கல் ,தேனி மாவட்டங்களில் முதல்வர் பயணம் மேற்கொண்டுள்ளார்.இந்நிலையில் தேனி மாவட்டத்தில் ரூ.74.21 கோடி மதிப்பீட்டில் 102 புதிய திட்டப் பணிகளையும், ரூ.300 கோடி மதிப்பில் நடந்து முடிந்த திட்டப் பணிகளையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அப்போது முதல்வர் பேசியது: “வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட மாடல். அதுதான் என்னுயை மாடல், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய மாடல். அதுதான் திராவிட மாடல். அரசு திட்டங்கள் அனைவருக்கும் போய் சேரக்கூடிய வகையில், ஒவ்வொரு திட்டத்தினையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு தனிமனிதனுடைய தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் இந்த அரசினுடைய இலக்கு. அந்த இலக்கை நோக்கிய பயணம்தான் திராவிட மாடல். திமுக பொறுப்பேற்று இன்னும் ஓராண்டு காலம் முடியவில்லை. இன்னும் ஒரு வாரம் காலம் இருக்கிறது. வரும் மே 7-ம் தேதிதான் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த ஓராண்டு காலத்தில், 5 வருடம் இல்லை 10 வருடம் ஆட்சியிலிருந்தால் செய்திருக்க வேண்டிய சாதனைகளை இந்த அரசு ஒரே ஆண்டு காலத்தில் செய்திருக்கிறது.கரோனா என்ற கொடிய நோய்க்கு ஓரளவுக்கு முற்றுப்புள்ளி வைத்தோம். தடுப்பூசி செலுத்துவதை மிகப்பெரிய மக்கள் இயக்கமாகவே மாற்றினோம். இதுவரை தமிழகத்தில், 91 விழுக்காடு பேருக்கு முதல்தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி செய்யப்பட்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன் கரோனாவுக்கு நிவாரண நிதியாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் யாரும் குறைக்காத சமயத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது.
இலங்கையிலிருந்து அடைக்கலம் தேடி வந்தவர்களுக்கு ரூ.317 கோடி மதிப்பிலான திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *