• Sat. Apr 20th, 2024

போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர் கணவர் மீது வழக்கு

இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக கவுன்சிலரின் கணவர் உள்பட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை வண்ணாரப்பேட்டை காவலர்கள் மணிவண்ணன், தியாகராஜன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திமுகவைச் சேர்ந்த 51-வது வார்டு கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் மற்றும் சிலர் பழைய வண்ணாரப்பேட்டை எம்சி.ரோடு, ஜே.பி. கோயில் தெருவில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த காவலர்கள் ‘ஏன் இங்கே நிற்கிறீர்கள்’ என்று கேட்டதாக தெரிகிறது. இதில், ஆத்திரமடைந்த அவர்கள் போலீசாரை ஆபாசமாக தகாத வார்த்தையால் திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை போலீசாரே செல்போனில் வீடியோ பதிவு செய்தனர். இதில் கவுன்சிலரின் கணவர் ஜெகதீசன் காவல் துறையினரை மிரட்டுவது, ஆபாசமாக திட்டுவது பதிவானது. இந்த வீடியோ சமூகவலை தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வண்ணாரப்பேட்டை காவல் நிலைய காவலர் தியாகராஜன் இந்த சம்பவம் தொடர்பாக வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவலர்களை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் மற்றும் பெயர் தெரியாத 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதில், இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 141- சட்டவிரோதமாக கூடுதல், 294(பி)- ஆபாசமாக திட்டுதல், 353- வன்முறை செயலால் அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், 506(1)- கொலை மிரட்டல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவரும், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தின் மாவட்ட செயலாளராகவும் உள்ள ஜெகதீசன், அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *