• Thu. Apr 18th, 2024

தீப்பெட்டி உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த முடிவு..

மூலப் பொருட்களில் விலையேற்றம் காரணமாக 6 ஆம் தேதியிலிருந்து 17 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தியை நிறுத்த உற்பத்தியாளர்கள் முடிவு செய்து உள்ளனர்.

நாடு முழுவதும் அனைத்து வகையான பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தீப்பெட்டி தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் விலையும் கணிசமான அளவு அதிகரித்து உள்ளது.

இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உற்பத்தியாளர்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி உற்பத்தி நிறுத்தத்தை அறிவித்து இருக்கின்றனர்.தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 50 முழு நேர தீப்பெட்டி ஆலைகள், 320 பகுதிநேர தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகளை பேக்கிங் செய்வதற்கென்றே 2,000 பேக்கிங் ஆலைகள் உள்ளன. நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 லட்சம் பேருக்கு இதனால் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இவர்களில் 90% பேர் பெண்கள்.

பட்டாசு உற்பத்திக்கு பெயர்போன விருதுநகரில் தீப்பெட்டிகளும் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக சிவகாசி, சாத்தூரில் ஏராளமான தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. இதேபோல் நெல்லை, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, வேலூர் மாவட்டம் குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் தீப்பெட்டி உற்பத்தி முக்கியமான தொழிலாக உள்ளது.

தமிழ்நாட்டின் இந்த பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிதான் வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு பல்வேறு பிராண்டுகளின் பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால், விற்பனையாளர்கள் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டினாலும் தொழிலாளர்களுக்கு கிடைப்பது சொற்பத் தொகைதான்.கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவை வாட்டிவதைத்து வரும் விலைவாசி உயர்வு தீப்பெட்டி தொழிலையும் விட்டுவைக்க வில்லை. இதனை உற்பத்தி செய்வதற்கு தேவையான மூலப்பொருட்களான பாஸ்பரஸ், மெழுகு, குளோரைடு, அட்டை, பேப்பர் போன்றவற்றின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

இதனை தாக்குபிடிக்க முடியாமல் ரூ.1-க்கு விற்கப்பட்டு வந்த தீப்பெட்டியின் விலை 14 ஆண்டுகளுக்கு பின் ரூ.2 ஆக உயர்த்தப்பட்டது. இருப்பினும் கடந்த 3 மாதங்களில் தீப்பெட்டி தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் விலை 30 முதல் 40% வரை அதிகரித்து இருப்பதால் தீப்பெட்டி விலையை உயர்த்தியும் பலன் கிடைக்கவில்லை. எனவே 600 தீப்பெட்டிகளை கொண்ட பண்டலின் விலையை ரூ.300-ல் இருந்து ரூ.350 ஆக உயர்த்த உற்பத்தியாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.

தீப்பெட்டி விலையை உயர்த்துவதன் மூலம் மட்டும் தங்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது என்பதை உணர்ந்த உற்பத்தியாளர்கள் மூலப்பொருட்களின் விலையை குறைக்க அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன் காரணமாகவே வரும் ஏப்ரல் 6 ஆம் தேதியிலிருந்து 17 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தியை நிறுத்த உற்பத்தியாளர்கள் முடிவு செய்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *