

மக்களவை தொகுதி மறுசீரமைப்பை கண்டித்து ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ வாசகத்துடன் நாடாளுமன்றத்திற்கு டி-சர்ட் அணிந்து வந்த திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2026-ம் ஆண்டு மக்களவை தொகுதி மறுவரையறை செய்யும் போது தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் அபாயம் உள்ளதாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். இதையொட்டி தென் மாநிலங்களைச் சேர்ந்த கூட்டு நடவடிக்கை குழு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டம் சென்னையில் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், #FairDelimitation என்ற வாசகம் பொறிக்கப்பட்ட டி – சர்ட்டை அணிந்து வந்தனர். மேலும் அதில், தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும் என்பதைக் குறிக்கும் ‘Tamil Nadu will fight, Tamil Nadu will win’ எனும் வாசகங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.
அதே டி- சர்ட்டுடன் அவர்கள் அவைக்குச் சென்றனர். இதைப் பார்த்த சபாநாயகர் ஓம் பிர்லா, வாசகங்கள் எழுதப்பட்ட டி-சர்ட்களை அணிந்து வருவது நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரானது. விதிகள் மற்றும் நடைமுறைகளுடன் சபை செயல்படுகிறது. உறுப்பினர்கள் அவையின் கண்ணியத்தையும் மரியாதையையும் பராமரிக்க வேண்டும். சில எம்.பி.க்கள் விதிகளைப் பின்பற்றாமல் கண்ணியத்தை மீறுகிறார்கள், இது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கூறிய ஓம் பிர்லா, அவையை நண்பகல் வரை ஒத்திவைத்தார்.
இதேபோல், மாநிலங்களவையிலும் டி ஷர்ட் விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. இதன் காரணமாக, நாடாளுமன்றக் குழு தலைவர்கள் தன்னை தனது அலுவலகத்தில் சந்திக்க அழைப்பு விடுத்த மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், அவையை நண்பகல் வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார். மீண்டும் 12.15 மணிக்கு அவைக்கு வந்த துணைத் தலைவர் ஹரிவன்ஷ், அவைia மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.

