• Sat. Apr 20th, 2024

திருப்பதி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 2 வாரங்கள் தடை..!

Byவிஷா

Dec 1, 2021

திருப்பதி கோவிலுக்கு செல்லும் மலைபாதையில் ஏற்பட்டுள்ள மண் சரிவு காரணமாக, கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் பயணத்தை 2 வாரத்திற்கு தள்ளி வைக்கமாறு திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.


திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள மண் சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணி அளவில் பெரும் பாறை சரிவு ஏற்பட்டது. திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் சாலையில் திருமலைக்கு அருகில் உள்ள வளைவு ஒன்றின் மேற்பகுதியில் இருந்து சுமார் 5 டன் எடையுள்ள பெரிய பாறை திடீரென்று சரிந்து விழுந்தது. மண் சரிவின் போது பாறை உருண்டு விழுந்ததில் 3 சாலைகளில் பயங்கர சேதம் ஏற்பட்டு, மரங்களும் சரிந்து விழுந்துள்ளன. அப்போது அந்த மலைபாதையில் சென்றுக்கொண்டிருந்த பேருந்து, நல்வாய்ப்பாக சேதமடையாமல் பயணம் செய்த அனைவரும் உயிர்தப்பினர்.


மேலும் மண் சரிவு காரணமாக 2 வது மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பல்வேறு இடங்களில் நீளமான பிளவுகள் ஏற்ப்பட்டுள்ளன. பாறைகள் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணியில் தற்போது தேவஸ்தான பொறியாளர்கள், வனத்துறை அதிகாரிகள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். காத்திருந்த வாகனங்களை இணைப்பு சாலை மூலம் முதலாவது பாதை வழியே திருமலைக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாலைகள் சேதம் அடைந்த பகுதியில் தேவஸ்தான அறங்காவல் குழு தலைவர் ஆய்வு செய்தார்.


இந்நிலையில் திருப்பதி கோவிலுக்கு செல்லும் மலைபாதையில் ஏற்பட்டுள்ள மண் சரிவு காரணமாக , கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் பயணத்தை 2 வாரத்திற்கு தள்ளி வைக்கமாறு டிக்கேட் முன்பதிவு செய்திருந்த பக்தர்களுக்கு தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் நிலைமை சரியான பிறகு , 10-15 நாட்களுக்கு பின் அதே டிக்கெட்டில் சாமிதரிசனம் செய்யலாம் என்றும், சாலை சீரமைப்பு பணி நடைபெறுவதால் திருப்பதிக்கு வருவதை தவிர்க்குமாறும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு , திருப்பதி திருமலையில் கொட்டிய கனமழையால் 13 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு, காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனையொட்டி ஏழுமலையான் கோவிலுக்குச் செல்லும் சாலை மற்றும் நடைபாதை, மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. கோவில் அருகில் உள்ள திருமலை நம்பி சன்னதியிலும் அதிகமாக தண்ணீர் வந்து ஆறு போல் ஓடியது. தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை ஊழியர்கள் நிலச்சரிவு மற்றும் முறிந்து விழுந்த மரக்கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மலைப்பாதைகளில் நிலச்சரிவை அகற்ற கிரேன்கள் ஈடுபடுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *