• Thu. Jun 8th, 2023

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Mar 8, 2022

தேவையான காய்கறிகள்:
உருளைக் கிழங்கு – சற்று பெரியது 1, கேரட் – 2 மீடியம் சைஸ், பீன்ஸ் – 150 கிராம்
முருங்கைக் காய் – 1, சேனை – கால் கிலோ, வாழைக்காய் – 1, வெள்ளரிக்காய் – 1,
வெள்ளை பூசணி, மஞ்சள் பூசணி – அரை பத்தை, கத்திரிக்காய் – 3 (மீடியம் சைஸ்)
தேங்காய் துருவியது – ஒரு கோப்பை, பச்சை மிளகாய் – நான்கு, சீரகம் ஒரு ஸ்பூன்
பெருங்காயத்தூள் சிறிது, கடைந்த தயிர் ஒரு சிறிய கோப்பை, தேங்காய் எண்ணெய் – 2, டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை – 4 கொத்து
செய்முறை
அவியலுக்கு காய் நறுக்குவதென்பது ஒரு தனி கலை. அவியலுக்கான எல்லா காய்களையுமே நம் சுண்டு விரல் அளவுக்கு நீள நீளமாக நறுக்கிக் கொள்ள வேண்டும். முடிந்தவரை அனைத்து காய்களையும் நறுக்குவதற்கு முன்னமே நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொண்டு பின்னர் நறுக்கினால் அவற்றின் சத்து வீணாகாது. நறுக்கிய காய்கள் அனைத்தையும் ஒரு அடிகனமான வாணலியிலோ, உருளியிலோ போட்டு அவை நன்கு வேகும் அளவுக்கு வேண்டிய நீர் விட்டு மஞ்சத்தூள், உப்பு சேர்த்து மூடிவிட வேண்டும். அவ்வப்போது திறந்து பார்த்து நீர் தேவை என்றால் சிறிது கூட சேர்த்து அடிபிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காய்கள் அனைத்தும் நன்கு வெந்து ஒரு பளபளப்பு கூடியிருக்கும். இப்போது மிக்சியில், தேங்காய்த் துருவல், சீரகம், பச்சைமிளகாய், மூன்று கொத்து உருவிய கறிவேப்பிலை எல்லாவற்றையும் போட்டு நன்கு அரைத்து காய்கறிக் கலவையில் சேர்த்து, பெருங்காயமும் சேர்த்து தேங்காயின் பச்சை வாசனை போகும் வரை ஒரு கொதி விட்டு, (அதிகம் கொதிக்கக் கூடாது) பிறகு கடைந்து வைத்திருக்கும் தயிரை அதன் மேலே ஊற்றி நன்கு கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடலாம். இதற்கு தாளிப்பு கிடையாது. கடைசியாக இந்த அவியலின் மேலே தேங்காய் எண்ணெய் பரவலாக ஊற்றி, மிச்சமிருக்கும் ஒரு கொத்து கறிவேப்பிலையையும் கிள்ளிப் போட்டு மூடி வைக்க வேண்டியதுதான். விருந்துகளில் இலையில் ஒரு ஐட்டமாகப் பரிமாறும் போது இதே அவியலைக் கொஞ்சம் கெட்டியாக செய்து கொள்ளலாம். அதை கெட்டி அவியல் என்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *