• Sun. Nov 3rd, 2024

இம்ரான்கானை சுட்டவரின் வாக்குமூலம்
வெளியான விவகாரம்: போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்

இம்ரான்கானை கொல்லவே அவரை துப்பாக்கியால் சுட்டேன் என்று துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதை தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றுள்ளதை ஏற்க மறுத்து வரும் இம்ரான்கான் தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறி வருகிறார். மேலும், பாகிஸ்தானின் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என கூறி வருகிறார். ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான புதிய அரசுக்கு எதிராக தனது கட்சியான பாகிஸ்தான் தெக்ரிக்-ஐ-இன்சஃப் கட்சியின் ஆதரவாளர்களை திரட்டி இம்ரான்கான் அவ்வப்போது பேரணி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், பஞ்சாப் மாகாணம் வாசிராபாத் நகரில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி இம்ரான்கான் தலைமையில் நேற்று பேரணி நடைபெற்றது. அல்லாவாலா என்ற பகுதியில் பேரணி நடைபெற்றபோது பேரணியில் பங்கேற்ற நபர் இம்ரான்கான் நோக்கி தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார். இதில், இம்ரான்கானின் காலில் குண்டு பாய்ந்தது. அந்த நபர் தொடர்ந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் படுகாயமடைந்தனர். ஒரு நபர் உயிரிழந்தார்.
துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோட முயன்ற நபரை இம்ரான்கானின் ஆதரவாளர்கள் சுற்றிவளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் போலீசாரிடம்
ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், இம்ரான்கான் நாட்டு மக்களை தவறான பாதையில் வழிநடத்துவதாகவும், அதனால் அவரை மட்டுமே கொலை செய்ய தான் திட்டமிட்டதாகவும் வாக்குமூலத்தில் அந்த நபர் பேசினார். மேலும், இம்ரான்கானை கொல்லவேண்டும் என்ற நோக்கத்தோடு லாகூரில் இருந்து வந்ததாகவும், இந்த திட்டத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்று கூறினார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரில் போலீசில் அளித்த வாக்குமூலம் வீடியோவாக சமூகவலைதளத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ராணுவத்திற்கு எதிரான கோஷங்களும் எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் வாக்குமூலம் கசித்த சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள் மேலும் சில போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *