• Thu. Apr 25th, 2024

68 மூட்டைகளில் 10 லட்சம் மதிப்புள்ள
தடைசெய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு கர்நாடகாவில் இருந்து பண்ணாரி சோதனை சாவடி வழியாக தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் மற்றும் போலீசார் நேற்று இரவு பண்ணாரி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆசனூரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வேகமாக ஒரு பிக்அப் வேன் வந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாகனத்தை நிறுத்தி டிரைவரிடம் விசாரித்தனர்.


அப்போது அவரது பெயர் சிராஜ் (31) என்பதும், கர்நாடக மாநிலம் குண்டல் பேட்டையில் இருந்து கோவை மாவட்டம் அன்னூருக்கு மாட்டு சாணம் கொண்டு செல்வதாக தெரிவித்தார். மேலும் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் பிக்அப் வாகனத்தில் இருந்து சாணியை அகற்றி விட்டு பார்த்தனர். அப்போது தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் 68 மூட்டைகளில் சுமார் 2 டன் அளவுக்கு இருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். இதையடுத்து போலீசார் வேனுடன் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்து டிரைவர் சிராஜை கைது செய்து விசாரித்தனர். அப்போது கர்நாடக மாநிலம் குண்டல் பேட்டையில் இருந்து கோவை மாவட்டம் அன்னூருக்கு இந்த போதை பொருட்கள் கடத்தி செல்லப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து யாருக்கு கொண்டு செல்ல போதை பொருட்கள் கடத்தப்பட்டது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *