• Mon. Dec 9th, 2024

மண் எடுக்க அனுமதி கோரி நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

Byகுமார்

Sep 23, 2021

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செண்பகராமன்புதூர், திருப்பதிசாரம், மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி திங்கள் சந்தை இரணியல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் முழுக்க முழுக்க குளங்களில் இருந்து மண்களை எடுத்து மண்பானைகளை செய்து விற்பனை செய்து வாழ்வாதாரத்தை நடத்திவருகின்றனர்.

இவர்களுக்கு தேவையான மண்களை குளங்களில் இருந்து எடுப்பதற்கு கடந்த 2 ஆண்டுகளாக அனுமதி வழங்காமல் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாக மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட மண்பாண்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆட்சித் தலைவரை சந்திக்க இதுவரை ஏழு முறை வந்ததும் அவர் சந்திக்க மறுத்து விட்டதாக வேதனையுடன் தெரிவித்த மண்பாண்ட தொழிலாளர்கள், பொங்கல் பண்டிகைக்கு தேவையான மண்பானைகளை இப்போதே தயார் செய்தால் தான் பண்டிகைக்கு தேவையான மண்பானைகளை வழங்கமுடியும்.

எனவே மண் எடுக்க அனுமதி வேண்டும் என கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதால் விரைவில் தஞ்சை, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் மிகப்பெரிய அளவில் மண்பாண்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் செய்தியாளரிடம் தெரிவித்தார்.