• Tue. Dec 10th, 2024

நவ.14ல் கூட்டுறவு வார விழா

Byவிஷா

Nov 6, 2024

நவம்பர் 14ஆம் தேதி முதல் கூட்டுறவு வார விழா நடைபெறுவதையொட்டி, சிறப்பாகச் செயல்பட்ட பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் கூட்டுறவில் இணைந்து பயன்பெற வேண்டும் என்ற வகையில், ஆண்டுதோறும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவ14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நாடு முழுவதும் தேசிய கூட்டுறவு ஒன்றியத்தின் வழிகாட்டுதலின்படி, கூட்டுறவு வார விழா கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில், இந்த ஆண்டு 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா-2024 நடைபெறுகிறது. நவ.14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை பல்வேறு தலைப்புகளில், தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. மாநில மற்றும் மாவட்ட அளவில் நடைபெறும் விழாக்களில் கூட்டுறவு தொடர்பான விழிப்புணர்வு, கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் நற்பயன்கள் தெரியப்படுத்தப்படுகின்றன. மேலும், சிறப்பாகச் செயல்பட்ட பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களுக்கு பாராட்டுக் கேடயங்கள் வழங்கி கவுரவிக்கப்படவுள்ளன.
அந்த வகையில், இந்தாண்டுக்கான கூட்டுறவு வார விழா கொண்டாடுவது தொடர்பாக, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன், அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் நிர்வாக இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது..,
கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டுக் கேடயங்கள் வழங்க, தகுதியான சங்கங்களை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்கான படிவங்கள் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படிவத்தை தொடர்புடைய கூட்டுறவு நிறுவனம் மூலம் பூர்த்தி செய்ய வேண்டும். கூட்டுறவு நிறுவனங்கள் வாரியாக பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களை பரிசீலித்து, ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு சங்கம் அல்லது வங்கியை தேர்வு செய்து, கூட்டுறவு பதிவாளருக்கு பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.