அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் கூடுதலான பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றி உறுதியானது. மொத்தமுள்ள 538 பிரதிநிதிகள் வாக்குகளில் பெரும்பான்மைக்கு தேவையான, 270 வாக்குகளை காட்டிலும் கூடுதலாக பெற்றுள்ளார். தற்போதைய சூழலில் ட்ரம்ப் 277 பிரதிநிதிகள் வாக்குகளையும், அவரை எதிர்த்து போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹார்ஸ் 226 பிரதிநிதிகள் வாக்குகளையும் பெற்றுள்ளனர். கடந்தமுறை அமெரிக்க அதிபராக இருந்தபோது, இந்திய பிரதமர் மோடி உடன் மிகுந்த நட்பு பாராட்டியவர் டொனால்ட் ட்ரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப்பின் அரசியல் பயணம்:
கடந்த 2016ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி, முதல்முறையாக குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபரானார். தொடர்ந்து, கடந்த 2020ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனிடம், ட்ரம்ப் தோல்வியை தழுவினார். இந்நிலையில், 4 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், குடியரசு கட்சி சார்பில் தேர்தெடுக்கப்பட்ட 20வது அதிபர் ட்ரம்ப் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.